Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதிக்கப்படும் பகுதியில் இருந்து தான் குன்னூருக்கு குடிநீர் எடுக்க வேண்டும் கன்டோன்மென்ட் தலைவர் திட்டவட்டம்

Print PDF

தினகரன் 30.08.2010

அனுமதிக்கப்படும் பகுதியில் இருந்து தான் குன்னூருக்கு குடிநீர் எடுக்க வேண்டும் கன்டோன்மென்ட் தலைவர் திட்டவட்டம்

குன்னூர், ஆக.30: கன்டோன்மென்ட் நிர்வாகம் குறிப்பிடும் பகுதியில் இருந்து தான் குன்னூர் நகராட்சிக்கு தேவையான குடிநீர் பெற்று கொள்ள அனுமதிக்கப்படும் என்று கன்டோன்மென்ட் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் 2010&11ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டமும், மாதாந்திர கூட்டமும் அதன் தலைவர் பிரிகேடியர் ஜாதவ் தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி அவஸ்தி முன்னிலை வகித்தார். குன்னூர் ஆர்.டி.ஓ ராஜூ, கன்டோன்மென்ட் போர்டு துணை தலைவர் பாரதியார் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

நடப்பாண்டு ரூ.7 கோடியே 80 லட்சத்து 23 ஆயிரத்து 351 வரவாக உள்ளது. பற்றாக்குறை ரூ.31 கோடியே 62 லட்சத்து 99 ஆயிரத்து 577 ஆக உள்ளது. மத்திய ராணுவ அமைச்சகத்திடம் ரூ.39 கோடியே 43 லட்சத்து 22 ஆயிரத்து 928 கோடி நிதி பட்ஜெட்டிற்காக கோரப்பட்டுள்ளது. இதனை தென்னக ராணுவ முதன்மை அதிகாரிக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் கூட்டம் நடைபெற்றது. குன்னூர் நகர மக்களுக்காக ஜிம்கானா குடிநீர் ஊற்று பகுதியில் தடுப்பணை கட்டி நீர் எடுக்க முடிவு செய்தது. இதற்கு கன்டோன்மென்ட் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குறிப்பிட்ட இடத்தில் தான் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால் நகராட்சி நிர்வாகம் வேறு இடத்தை தேர்வு செய்தது. இப்பகுதியிலுள்ள 3 இடங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சோதனை செய்யப்பட்டது. அதில் கிடைக்க பெற்ற அறிக்கை ஒரே மாதிரியாக இருந்தது. எனவே கன்டோன்மென்ட் நிர்வாகம் கூறும் பகுதியில் தான் நகராட்சி குடிநீர் எடுக்க வேண்டும் என்று கன்டோன்மென்ட் தலைவர் தெரிவித்தார்.

ஆர்.டி.ஓ ராஜூ கூறும் போது, கன்டோன்மென்ட் நிர்வாகம் குறிப்பிட்டுள்ள பகுதியில் கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.

தலைவர்:

அதனை நீங்கள் தான் சுத்திகரித்து சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட கலெக்டரிடம் பேசி கொள்ளலாம்.

வினோத்(திமுக):

மாநில அரசு சார்பில் கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு எந்த விதமான நிதியும் ஓதுக்கீடு செய்யப்படுவதில்லை. வரும் காலங்களிலாவது நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?

ஆர்.டி.:

உங்கள் கோரிக்கை விவகாரம் தனி. குடிநீர் பிரச்னை தனி. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய முடிவு எடுப்பார்.

வினோத்(திமுக):

குடிநீர் பிரச்னைக்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் 7 முறை பேச்சு நடத்தினர். ஆனால் கன்டோன்மென்ட் நிர்வாகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பது வருந்ததக்கது.

கன்டோன்மென்ட் நிர்வாகம் வசூலிக்க முற்பட்ட நுழைவு வரி வசூலையும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

துணை தலைவர் பாரதியார்:

கன்டோன்மென்ட் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் வருவாயை பெருக்க கூடிய திட்டங்களை செயல்படுத்துவதில் கலெக்டர் நேரடியாக தடை விதிக்க இயலாது. தனது கருத்தை 56/2வது சட்ட விதிகளின்படி மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்யலாம்.

இப்பகுதியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பள்ளிகள் 2 உள்ளது. அதில் புதிய கட்டிடம் கட்டும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் வழி கல்வி பள்ளிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரும், ஆங்கில வழி பள்ளிக்கு மானெக்ஷா பெயரும் வைக்க வேண்டும்.

தலைவர்: புதிய கட்டிடம் கட்டப்பட்டு இதற்கான திறப்பு விழா நடைபெறும் போது உங்கள் கோரிக்கைப்படி பெயர் வைக்கப்படும்.

கடந்தாண்டு நவம்பரில் செய்த கன மழையால் பெருத்த சேதம் கன்டோன்மென்ட் பகுதியில் ஏற்பட்டது. மாநில அரசு சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. எனவே கிர்க்கி கன்டோன்மென்ட் நிர்வாகத்தில் ரூ.2 கோடி கடன் கோரப்பட்டது. 12 சதவீத வட்டியுடன் தொகையை வழங்க கிர்க்கி நிர்வாகம் ஒப்பு கொண்டது. ஆனால் வட்டியின்றி கடன் வழங்க வேண்டும் என்று கிர்க்கி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்க வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றிட முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் புஷ்பராஜ், மார்டின், சிவக்குமார், லலிதா, ஸ்ரீதேவி ஆகியோர் பங்கேற்றனர்.