Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூரில் புதிய குடிநீர்த் திட்டத்தால் ரூ 4.21 கோடி சாலை திட்டத்திற்கு பாதிப்பு?

Print PDF

தினமணி 02.09.2010

கடையநல்லூரில் புதிய குடிநீர்த் திட்டத்தால் ரூ 4.21 கோடி சாலை திட்டத்திற்கு பாதிப்பு?

கடையநல்லூர்,செப்.1: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கான பணிகள் தொடங்கும் சூழலில், சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் நகராட்சிப் பகுதியில் ரூ 4.21 கோடி மதிப்பில் தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் திட்டப் பணிகளால் இப் புதிய சாலைகள் சேதமடையும் நிலையுள்ளதால், சாலை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணம் வீணாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

புதிய குடிநீர்த் திட்டம்: 52.25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள கடையநல்லூர் நகராட்சியில், சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். 13,000 பேருக்கு இந் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 50.23 கிலோ மீட்டர் நீள உள்புற சாலைகளும், 6 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையும் இந் நகராட்சி பகுதிக்குள் உள்ளன.

கடையநல்லூருக்கு 1973-ம் ஆண்டு முதல் கருப்பாநதி அணைக்கட்டு திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனுடன், 2003-ம் ஆண்டு முதல் தாமிரபரணி குடிநீர்த் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்விரண்டு திட்டங்களின் மூலமும் நாளொன்றுக்கு சுமார் 68 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும் பல இடங்களில் பகிர்மானக் குழாய்களின் சீரற்ற நிலையினால் குடிநீர்ப் பிரச்னை ஏற்படுவதாகப் புகார் எழுந்தன.

இக் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் புதிய குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பீட்டர்அல்போன்ஸ் எம்.எல்.. கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து ரூ21.41 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். துணை முதல்வர் மு..ஸ்டாலின், ஆக.6-ம் தேதி குடிநீர்த் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஜெர்மனியின் கே.எப்.டபிள்யூ. நிறுவனத்தின் நிதியுதவி மற்றும் தமிழக அரசின் மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் கருப்பாநதி ஆற்றுப்பகுதியில் தடுப்பணையும், சந்தைப் பகுதியில் கீழ்நிலைத் தொட்டியும் கட்டப்படுகின்றன.

மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், இக்பால்நகர், முத்துக்கிருஷ்ணாபுரம், பேட்டை, குமந்தாபுரம் ஆகிய 7 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் அமைக்கப்படவுள்ளன. நகராட்சி முழுவதும் உள்ள பிரதானக் குடிநீர்க் குழாய்கள், பகிர்மானக் குழாய்கள் மற்றும் வீட்டின் இணைப்பு குழாய்கள் உள்ளிட்ட அனைத்து குழாய்களும் மாற்றப்படவுள்ளன.

சிறப்பு சாலைத் திட்டம்: இதற்கிடையே, 30.8.2010-ல் நடைபெற்ற கடையநல்லூர் நகராட்சி அவசரக் கூட்டத்தில், நகராட்சிகள் நிர்வாக இயக்குநரின் (சென்னை) நேர்முக கடிதங்களில் தெரிவித்துள்ளபடி, 2010-2011 ஆண்டின் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற்று 51 தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் மூலம் ரூ 1 கோடி மதிப்பீட்டில் பேட்டை மலம்பேட்டையிலிருந்து, தலைமை நீரேற்றும் நிலையம் வரை தார்ச்சாலை அமைப்பது, ரூ38 லட்சம் மதிப்பீட்டில் மேலக்கடையநல்லூர் மலம்பேட்டைத் தெருவில் தார்ச்சாலை அமைத்தல்,

ரூ 19 லட்சம் மதிப்பீட்டில் ஜவாஹர் தெருவில் தார்ச்சாலை அமைப்பது, ரூ33 லட்சத்தில் கிருஷ்ணாபுரம் ரயில்வே பீடர் ரோட்டில் தார்ச்சாலை அமைப்பது உள்ளிட்ட 51 பணிகள் ரூ|4 ,21,70,000 மதிப்பீட்டில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய குடிநீர்த் திட்டத்தின் கீழ் அனைத்து குடிநீர்க் குழாய்களும் மாற்றியமைக்கப்படவுள்ளன. இதற்கிடையே, இந்த சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் சாலை அமைத்தாலும், குடிநீர் குழாய்களைப் பதிக்க, புதிதாக போடப்படும் சாலைகளை தோண்ட வேண்டிய நிலை நிச்சயம் ஏற்படும்.

இதனால் புதிய சாலைகள் சேதமடையும். மீண்டும் சாலை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகும் அபாயம் உள்ளது.

எனவே, புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்திய பின்னரே புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.