Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதல்வர் தொடக்கி வைக்கும் குடிநீர் திட்டப் பணி தீவிரம்

Print PDF

தினமணி 03.09.2010

முதல்வர் தொடக்கி வைக்கும் குடிநீர் திட்டப் பணி தீவிரம்

திருச்சி, செப். 2: ரூ.169 கோடி மதிப்பிலான திருச்சி மாநகர குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியை வரும் 8-ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கவுள்ளதை அடுத்து, அந்தப் பகுதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாநகரிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் ரூ.169 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, 9 தொகுப்புகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன், மாநில அரசின் மானியமும் உள்ளது.

இத்திட்டத்தில், ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 3 பிரதான நீர் சேகரிப்பு கிணறுகள், 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், குடிநீர் விநியோகத்துக்கு ஏதுவாக 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 88.59 கிமீ தொலைவுக்கு பிரதான மற்றும் கிளை உந்து குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வருகிற 8-ம் தேதி முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக, இத் திட்டத்தின் ஒரு பகுதியை தொடங்கி வைக்கும் பணியும் இணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 3-ம் கிணற்றிலிருந்து அய்யாளம்மன் படித்துறை அருகேயுள்ள பொன்மலை கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சேகரிக்கும் கிணறு வரை 5.5 கிமீ தொலைவுக்கு குடிநீரேற்றும் குழாய் பதிக்கப்பட்டு இறுதியாக குழாய்கள் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எஞ்சியுள்ள பணிகளை இரு நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இந்த ஆய்வின்போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், உதவிச் செயற்பொறியாளர் என். பாலகுருநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 03 September 2010 11:10