Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் நிறைவு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன் 04.09.2010

கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் நிறைவு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்

பொள்ளாச்சி, செப். 4: பொள்ளாச்சி கம்பாலபட்டி கூட்டு குடிநீர்த் திட்டத்தில் நீருந்து நிலையம் சுத்தம் செய்யும் பணி முடிவடைந்துள்ளதால் நேற்று முதல் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் துவங்கியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த எஸ்.நல்லூர், கம்பாலபட்டி, கோட்டாம்பட்டி, ஜல்லிபட்டி, பில்சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம் ஆகிய 6 ஊராட்சிகளும், சமத்தூர் மற்றும் கோட்டூர் ஆகிய இரு பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளுக்கு கம்பாலபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆழியாறு அணைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள நீருந்து நிலையம் மூலம் குடிநீர் பெறப்பட்டு சுத்திகரிப்பு செய்த பிறகு கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுத்திகரிப்பு நிலையம் சுத்தம் செய்தல் மற்றும் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி கடந்த 29ம் தேதி முதல் பராமரிப்பு பணி தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற்றது. பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர்த் திட்ட தலைவரும், எஸ். நல்லூர் ஊராட்சித் தலைவருமான யுவராஜ் கூறியதாவது:

ஆழியாறு ஆற்றில் இருந்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர்த் திட்டத்துக்கு தண்ணீர் பெறப்படுகிறது. இந்த நீர் ஆழியாற்றில் உள்ள 3 நிலமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்த பிறகே கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் எஸ்.நல்லூர், கம்பாலபட்டி, ஜல்லிபட்டி (மஞ்சநாயக்கனூர்), பில்சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், டி.கோட்டாம்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளும், சமத்தூர் மற்றும் கோட்டூர் ஆகிய இரு பேரூராட்சிகளும் பயனடைகின்றன.

மேற்படி கிராமங்களுக்கான குடிநீர்த் திட்டத்தில் தலா சுமார் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலமட்ட நீர்த் தேக்கத் தொட்டிகளில் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

இத்தொட்டிகள் 3 மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து அதில் உள்ள மாசுபட்ட மணல் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மணல் கொட்டப்படும். நீருந்து நிலையம் முன்பு, புளியங்கண்டியில் இரு இடங்கள், பெட்ரோல் பங்க் எதிரே, மாடேத்தி பள்ளம், துறையூர் மேடு, அரசூர், பூவலப்பருத்தி, விஜயேஸ்வரி மில் அருகே என பல இடங்களில் திட்டக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்படி இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சரி செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 29ம் தேதி துவங்கியது. சுமார் 50 பணியாளர்களைக் கொண்டு இப்பணி 5 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 2ம் தேதியுடன் பணிகள் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து மேற்படி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு இன்று (நேற்று) முதல் குடிநீர் விநியோகம் துவங்கியுள்ளது. இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.