Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் திட்டப் பணிகளை 3 மாதங்களுக்குள் நிறைவேற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 06.09.2010

குடிநீர் திட்டப் பணிகளை 3 மாதங்களுக்குள் நிறைவேற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

விழுப்புரம், செப். 5: நகர, கிராம குடிநீர் திட்டங்கள் மற்றும் விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி தலைமையில் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியதை முன்னிட்டு இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

பாதாள சாக்கடைத் திட்டம், விழுப்புரம், செஞ்சி குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராம குடிநீர் திட்டப்பணிகளை மூன்று மாதங்களுக்குள் ஒப்பந்ததாரர்கள் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மின் இணைப்பு பெறுவதில் தாமதம் மற்றும் உள்ளாட்சிகள் தொடர்புடைய குறைபாடுகள் ஏற்படும் பட்சத்தில் உடனுக்குடன் என் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

இக் கூட்டத்தில் விழுப்புரம் கிராம குடிநீர் திட்ட செயற்பொறியாளர் பி.கே.வரதராஜன், நகர கோட்ட செயற்பொறியாளர் என்.பாலகுமார், திண்டிவனம் கிராம குடிநீர் திட்ட செயற்பொறியாளர் எஸ்.கே.எம். அஜ்மல்கான் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகள், தாமதமாக நடைபெறும் பணிகள் பற்றி தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் மழைக் காலத்திற்குள் நிலுவைப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக் கூட்டத்தில் விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் கே.பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி கோட்டப்பொறியாளர் வி.குமார், கடலூர் கோட்டப்பொறியாளர் ஜெ..செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.