Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.43.3 கோடியில் வாசுதேவநல்லூர் குடிநீர் திட்டபணிகள் அக்டோபர் மாத இறுதியில் முடிவடையும்

Print PDF

தினமலர் 14.09.2010

ரூ.43.3 கோடியில் வாசுதேவநல்லூர் குடிநீர் திட்டபணிகள் அக்டோபர் மாத இறுதியில் முடிவடையும்

திருநெல்வேலி:ஆலங்குளம் தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பூங்கோதை உத்தரவிட்டார்.ஆலங்குளம் தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குடிநீர், சாலை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.இதில் அமைச்சர் பூங்கோதை பேசியதாவது:கடந்த 4 ஆண்டுகளில் ஆலங்குளம் தொகுதியில் 7.5 கோடி செலவில் சாலை பணிகள் நடந்துள்ளது. 23 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. 10 தொட்டிகள் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். ஏற்கனவே கட்டப்பட்ட 15 தொட்டிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் 43.3 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நடந்து வரும் பணிகள், ஏற்கனவே நடந்து வரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட அனைத்து பஞ்., பகுதிகளில் உள்ள வீடுகளில் தனி நபர் கழிப்பறைகள் அமைத்து முழு சுகாதாரமான கிராமங்களாக மாற்ற அனைத்து பஞ்., தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ்கள் சரியான நேரத்திற்கு இயங்கவில்லை என புகார்கள் வந்துள்ளது. எனவே, மினி பஸ்கள் சரியான நேரத்தில் சரியான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.மேலும், மானூர், ஆலங்குளம், கீழப்பாவூர் ஆகிய பஞ்.,யூனியன்களுக்கு உட்பட்ட பஞ்., தலைவர்களிடம் பஞ்.,களில் நடந்து வரும் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பஞ்., தலைவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

இதில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் முருகன், வட்டார போக்குவரத்து அலுவலர் பொன் செந்தில்நாதன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இன்ஜினியர்கள் ராஜ்குமார், மரிய சவரிமுத்து, நெடுஞ்சாலைத் துறை கோட்ட இன்ஜினியர்கள் சவுந்தர்ராஜன், சத்தியமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் வீரமணி, பஞ்.,களின் உதவி இயக்குனர் திரவியம், பி.ஆர்.ஓ ரவீந்திரன், .பி.ஆர்.ஓ நவாஸ்கான், மாவட்ட பஞ்.,கவுன்சிலர் அன்பழகன், வேளாண் விற்பனை குழு துணைத் தலைவர் அருள்மணி, கீழப்பாவூர் டவுன் பஞ்., செயல் அலுவலர் லெனின், பஞ்.,களின் உதவி இயக்குனர் அலுவலக உதவியாளர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.