Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்! மாநகராட்சியில் தொடரும் அலட்சியம்

Print PDF

தினமலர் 22.09.2010

தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்! மாநகராட்சியில் தொடரும் அலட்சியம்

சேலம்: சேலம் மாநகரத்தில் மக்கள் குடிநீர் இன்றி அவஸ்தைபடும் இந்த நேரத்தில் யாருக்கும் பயன்படாமல் தினம்தோறும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவலம் நடந்து வருகிறது.சேலம் மாநகராட்சிக்கு நங்கவள்ளி குடிநீர் திட்டம், ஆத்தூர் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டம் மூலம் மாநகர மக்களுக்கு தினம்தோறும் 750 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சேலம் மாநகரத்தில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சி சார்பில் மொத்தம் 84 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையில் வசிக்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 120 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.

தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு நபருக்கு 70 முதல் 80 லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது.ஏற்கனவே மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகளாலும், பல வணிக நிறுவனங்களுக்கு அனுமதிக்குமேல் குடிநீர் விநியோகம் செய்து வருவதாலும் மாநகராட்சிக்கு கிடைக்கவேண்டிய வருமானம் குறைந்தும், மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்காமலும், மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்னை சேலத்தில் தலைவிரித்தாடி வருகிறது.

தினம் தோறும் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பிரச்னையால் மக்கள் பொறுமையிழந்து காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் வாரத்துக்கு மூன்று போராட்டங்கள் குடிநீர் பிரச்னையை மையமாக வைத்து நடக்கிறது. .தி.மு.., பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பின் பேரில் கடந்த மாதம் அ.தி.மு.., சார்பில் சேலம் மாநகராட்சி குடிநீர் பிரச்னை குறித்து பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் சேலம் திருமகள் பைபாஸ் லாரி அசோசியேஷன் பங்க் அருகில் இருக்கும் குடிநீர் பைப்பின் கேட் வால்வு உடைந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாக்கடையில் கலந்து வருகிறது.உடைந்த இந்த கேட் வால்வில் இருந்து மிக அதிகமாக குடிநீர் எந்நேரமும் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

வெளியேறும் குடிநீரை அந்த பகுதி மக்கள் பிடித்துச்செல்கின்றனர்.இந்த பகுதியில் நாமக்கல், சங்ககிரி பகுதியில் இருந்த வெளிமாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் செல்கிறது. அவர்கள் இந்த பகுதியில் லாரிகளை நிறுத்திவிட்டு துணிகள் துவைத்தும், குளித்துவிட்டும் செல்கின்றனர். இந்த குடிநீர் பைப் நங்கவள்ளி குடிநீர் திட்டத்தின் மூலம் சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கேட் வால்வு உடைந்து பல ஆண்டுகள் ஆகியும் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் இன்னும் சரிசெய்யப்படவில்லை.இப்படி குடிநீர் பைப் உடைந்து சாக்கடையில் கலந்து வருவதை பலமுறை படத்துடன் சுட்டிக்காட்டியும் கூட அதிகாரிகள் விழித்துக்கொள்ளவில்லை. அதைப்பற்றி மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே, தண்ணீரின் மதிப்பை அறிந்து உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தாமதிக்காமல் சரிசெய்ய வேண்டும்.