Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி 33வது வார்டு மக்கள் அவதி : குடிநீர் சப்ளை செய்யாத பரிதாபம்

Print PDF

தினமலர் 23.09.2010

நகராட்சி 33வது வார்டு மக்கள் அவதி : குடிநீர் சப்ளை செய்யாத பரிதாபம்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு நகராட்சி 33வது வார்டில் குடிநீர் சரிவர சப்ளை செய்யாததால், அப்பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர் வேலைக்கு செல்லாமல் குடிநீர் பிடிக்க காலிக்குடங்களுடன் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் பரிதாப சூழலும் அங்கு நிலவி வருகிறது. திருச்செங்கோடு நகராட்சி 33வது வார்டு நாமக்கல் ரோடு மலைசுத்தி பாதையில் அமைந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அங்குள்ளன. அவர்களது குடிநீர் வசதிக்காக பொதுக் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற பயன்பாட்டுகளுக்கான தண்ணீர் சப்ளை செய்ய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில மாதங்களாக அப்பகுதியில் குடிநீர் சரிவர செய்யப்படுவதில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குறைந்த அளவு நேரம் மட்டும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுபோதுமானதாக இல்லை என, அப்பகுதியினர் தொடர் புகார் எழுப்பினர். அதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதுவும் சரிவர சப்ளை செய்யப்படுவதில்லை. பகல், இரவு என நேரங்கட்ட நேரத்தில் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அங்குள்ள அனைவரும் கூலி வேலை செய்து ஜீவனம் நடத்தி வருபவர்கள். குடிநீர் எப்போது சப்ளை செய்யப்படும் என்பது தெரியாததால், பலர் வேலைக்கு செல்லாமல் காலிக் குடங்களுடன் நாள் கணக்கில் காத்துக்கிடக்க நேரிடுகிறது. ஒரு மினி ஆட்டோ தண்ணீர் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக தொகை என்பதால், அவற்றை மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத பரிதாபம் நிலவி வருகிறது.

இதுகுறித்து 33வது வார்டு நாடார் தெருவைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: இங்கு காவிரிக் குடிநீர் தண்ணீர் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. குறைந்த அளவு நேரம் மட்டுமே சப்ளை செய்யப்படுவதால், இங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவற்றை பிடிக்க இயலுவதில்லை. ஒருவருக்கு ஒரு குடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. போரில் சுத்தமாக தண்ணீர் இல்லை. அதனால், மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் சப்ளை செய்ய இயலுவதில்லை. நகராட்சி மூலம் லாரியில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் எப்போது வரும் என்பதை உறுதியாக கூற இயலாது. சில வாரத்துக்கு முன் நள்ளிரவு 1 மணியளவில் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.

தண்ணீர் பற்றாக்குறையால் அந்த நேரத்தில் குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க செல்லவேண்டியிருந்தது. தனியார் ஒரு குடம் தண்ணீர் 3 ரூபாய், காவிரி தண்ணீர் ஒரு குடம் 5 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அருகே உள்ள மலையடிக் குட்டையில் இருந்து எடுத்து வரப்படும் ஒரு மினி ஆட்டோ டேங்க் தண்ணீர் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் எங்களால், பணம் கொடுத் தண்ணீர் வாங்கமுடியாது. தண்ணீர் எப்போது வரும் என்பது தெரியாததால் பலர் கூலி வேலைக்கும் செல்லாமல் தண்ணீர் பிடிக்க நாள் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்தி குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Last Updated on Thursday, 23 September 2010 05:45