Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்: இந்த வாரம் திறப்பு

Print PDF

மாலை மலர் 24.09.2010

சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்: இந்த வாரம் திறப்பு

சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்: இந்த வாரம் திறப்பு

சென்னை, செப். 24- சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்காக கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். 2009-10-ம் ஆண்டுக்காக 7 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு வந்தது. மீண்டும் இந்த வாரத்தில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வரை உள்ள கிருஷ்ணா கால்வாயின் மொத்த நீளம் 152 கிலோ மீட்டர். தற்போது கண்டலேறு அணையில் இருந்து இந்த கால்வாய் மூலம் திருப்பதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அடுத்து சென்னைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு தண்ணீர் வர 4 நாட்கள் ஆகும். தற்போது திருப்பதிக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளதால் 70 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் வந்துவிட்டது.

எனவே, தற்போது சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரை திருப்பிவிட்டால் 2 நாட்களுக்குள் ஊத்துக் கோட்டையில் உள்ள தமிழக எல்லைக்கு வந்துவிடும். அங்கிருந்து 25 கிலோ மீட்டர் கால்வாய் மூலம் பூண்டி ஏரியை வந்தடையும்.

இன்றைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 1306 மில்லியன் கனஅடியும், சோழவரத்தில் 373 மில்லியன் கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 1347 மில்லியன் கனஅடி தண்ணீரும், செம்பரம் பாக்கத்தில் 1599 மில்லியன் கனஅடி தண்ணீரும் இருக்கிறது.

இது தவிர வீராணம் ஏரியில் 763 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

இதன் மொத்த இருப்பு கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த தண்ணீரை விட 2500 மில்லியன் கனஅடி அதிகம். கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் ஏரிகளின் நீர்மட்டம் மேலும் உயரும். சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு குடிநீர் உள்ளது. தினமும் 660 மில்லியன் குடிநீர் "சப்ளை" செய்யப்படுகிறது.