Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடுத்த ஓராண்டு காலத்துக்கு குடிநீர் வெட்டு இல்லை

Print PDF

தினகரன் 04.10.2010

அடுத்த ஓராண்டு காலத்துக்கு குடிநீர் வெட்டு இல்லை

மும்பை, அக்.4: அடுத்த ஓராண்டு காலத்துக்கு மும்பையில் குடிநீர் வெட்டு அமல்படுத்துவதில்லை என மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஆறு ஏரிகளிலும் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் தேவைப்படும் தண்ணீர் உள்ளது. ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் கையிருப்பு உள்ளதால் அடுத்த மழைக்காலம் துவங்கும் வரையில் குடிநீர் வெட்டு எதுவும் அமல்படுத்தப்பட மாட்டாது.

மாநகராட்சி கமிஷனர் சுவாதீன் ஷத்திரியா, ஏரிகளின் தண்ணீர் நிலவரம் குறித்து குடிநீர் இலாகா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நகரின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஏரிகளில் தண்ணீர் இருப்பதால் அடுத்த மழைக்காலம் வரையில் குடிநீர் வெட்டு அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது ஆறு ஏரிகளிலும் 12.96 லட்சம் மில்லியன் லிட்டர் தண்ணீர் கையிருப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பையில் 15 சதவீதம் குடிநீர் வெட்டு அமல் படுத்தப்பட்டிருந்தது. பண்டிகை காலத்தையொட்டி செப்டம்பரில் இந்த குடிநீர் வெட்டு நீக்கப்பட்டது. எனினும் மழை சரியாக பெய்யாவிட்டால் குடிநீர் வெட்டை மீண்டும் அமல் படுத்த மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. ஆனால் கடந்த மாதம் நல்ல மழை பெய்து ஏரிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. மொடக் சாகர் மற்றும் துள்சி ஏரிகள் ஜூலை 27ம் தேதி நிரம்பி வழிந்தன. தான்சா ஏரி ஆகஸ்ட் 6ம் தேதியும் விஹார் ஏரி ஆகஸ்ட் 19ம் தேதியும் நிரம்பின. அப்பர் வைதர்னா ஏரி கடந்த செவ்வாய்க்கிழமை நிரம்பியது. பட்சா ஏரியும் கிட்டத்தட்ட நிரம்பிய நிலையில் இருக்கிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சியின் இந்த முடிவை அடுத்து கடந்த ஓராண்டு காலமாக 15 சதவீதம் குடிநீர் வெட்டை சந்தித்து வந்த மும்பைவாசிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.