Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முக்கூடல்&வாசுதேவநல்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் டிசம்பரில் முடியும் அதிகாரிகள் தகவல்

Print PDF

தினகரன் 05.10.2010

முக்கூடல்&வாசுதேவநல்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் டிசம்பரில் முடியும் அதிகாரிகள் தகவல்

முக்கூடல்&வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஆலங்குளம் அருகே குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. உள்படம்: பணியினை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆலங்குளம், அக். 5: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.43.3 கோடியில் முக்கூடல்&வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், ராயகிரி, சிவகிரி, ஆலங்குளம் பேரூராட்சிகள் மற்றும் வாசுதேவநல்லூர், பாப்பாக்குடி ஒன்றியங்களில் உள்ள 78 வழியோர கிராமங்கள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியங்களில் உள்ள 41 வழியோர கிராமங்கள் பயன்பெறும் வகையில் முக்கூடல்&வாசுதேவநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ.43.3 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதற்கான பணிகள் கடந்த 2007ம் ஆண்டு மே 29ம் தேதி துவங்கியது. மொத்தம் 79 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மெயின் ரோட்டில் குழாய் பதிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரியத்தின் நெல்லை, குமரி வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், தென்காசி குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் குத்தாலிங்கம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ''இந்த மெகா கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கென முக்கூடல், காசிநாதபுரம், கலிங்கப்பட்டி, சேர்ந்தமங்கலம், கூடலூர், ராயகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் நீர் உந்தும் பம்ப்பிங் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 79 கிலோ மீட்டர் தூரத்தில் இதுவரை 67 கிலோ மீட்டர் தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும்.

இந்த மெகா திட்டத்தின் மூலம் நெல்லை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 64 ஆயிரத்து 43 பேர் பயன்பெறுவர். ஆலங்குளம் பேரூராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்ய புதிதாக இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் ஆலங்குளத்திற்கு தினசரி 12 லட்சம் லிட்டரும், உச்ச காலத்தில் 16 லட்சம் லிட்டர் வரையிலும் குடிநீர் சப்ளை செய்யப்படும். ஆலங்குளத்திற்கு வரும் 30ம் தேதிக்குள் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன'' என்றனர்.