Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீவி.,நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு: குடிநீர் திட்ட பணிகள் தீவிரம் எதிரொலி

Print PDF

தினமலர் 06.10.2010

ஸ்ரீவி.,நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு: குடிநீர் திட்ட பணிகள் தீவிரம் எதிரொலி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் துரிதமாக நடந்து வருவதையொட்டி புதிய குடிநீர் இணைப்பு வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீவி., நகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க செண்பகதோப்பு பேயனாற்று பகுதியிலிருந்து தினமும் கிடைத்த 40 லட்சம் லிட்டர் தண்ணீரை வைத்து ஸ்ரீவி.,யில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது. வறட்சியால் 20 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைப்பதால் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2007 நவம்பரில் 29 கோடி ரூபாயில் நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர வாசுதேவ நல்லூர் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஸ்ரீவி., நகராட்சிக்கு தினமும் 72 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

இத்திட்டத்தில் ஸ்ரீவி., நகராட்சியில் ஊரணிப்பட்டி, பெருமாள் பட்டி , நகராட்சி வளாகம் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. இதற்காக விருதுநகர் மாவட்ட எல்லையிலிருந்து ஸ்ரீவி., வரையிலான 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது. இப்பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் குழாய் பதிக்கும் பணி தாமதமாக நடந்து வருகிறது. இப்பணியையும் விரைவாக முடித்து டிசம்பர் மாதத்திற்குள் தாமிரபரணி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவைகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அக்., 7 முதல் நகராட்சி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது. இதில் வீடுகளுக்கு 5,000 ரூபாய், வணிக நிறுவனங்களுக்கு 10,000, தொழிற்சாலைகளுக்கு 15,000 ரூபாய் முன் வைப்பு தொகையாகவும், விண்ணப்ப பதிவு கட்டணமாக 100 ரூபாயும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.