Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

1.50லட்சம் போர்வெல் உறிஞ்சுவதால் பெங்களூரின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது

Print PDF

தினகரன் 07.10.2010

1.50லட்சம் போர்வெல் உறிஞ்சுவதால் பெங்களூரின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது

பெங்களூர், அக். 7: பெங்களூர் மாநகரில் குடிநீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதற்காக 1.50லட்சம் போர்வெல் போடப்பட்டு தினமும் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மாநிலத்தில் மழை நீர் சேமிப்பு, நிலத்தடி நீர்மட்ட பாதுகாப்பு போன்றவைக்கு மாநில அரசு விதிமுறைகள் வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், நிலத்தடி நீரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதை தடுக்க மட்டும் எந்த சட்டமும் கொண்டுவரவில்லை.

கட்டுப்பாடு இல்லாததால், மாநகராட்சி சார்பில் இஷ்டம்போல் போர்வெல் தோண்டுப்படுகிறது. தற்போது எடுத்துள்ள கணக்குப்படி மாநகராட்சி பகுதியில் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளும், புதிதாக மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட 7 நகரசபைகள், ஒரு டவுன் முனிசிபாலிட்டி மற்றும் 110 கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் இருப்பதாக தெரியவருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 100 அடி தோண்டினால் தண்ணீர் கிடைக்கும். ஆனால், தற்போது 500 முதல் ஆயிரம் அடிக்கும் அதிகமாக தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காத அளவுக்கு நிலத்தடி நீரின் மட்டம் குறைந்துள்ளது. கர்நாடக மாநில நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு தோண்டிருந்தால் அதை சுற்றி 500 சதுர மீட்டர் தூரத்தில் இன்னொரு ஆழ்துளை கிணறு தோண்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் ஒரு வீட்டில் ஆழ்துளை கிணறு தோண்டியிருந்தால், பக்கத்து வீட்டினர் தோண்டுவதற்கு எந்த தடையுமில்லை. இதை தனியார் ஆழ்துளை கிணறுகள் என்ற அடிப்படையில் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது.

பெங்களூர் குடிநீர் வாரியத்தின் சார்பில் கடந்த 2001&02ல் 3 லட்சத்து 34 ஆயிரத்து 805 இணைப்புகள் கொடுத்திருந்தது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரத்து 950 லட்சம் லீட்டர் குடிநீர் வினியோகம் செய்தது. அப்போது மாநகரின் மக்கள் தொகை 60.37 லட்சமாக இருந்தது.

தற்போது மாநகரின் மக்கள் தொகை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. 5 லட்சத்து 69 ஆயிரத்து 618 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 9 ஆயிரத்து 600 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையில் 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சியாக இருந்தபோது 240 சதுர கிலோ மீட்டர் மட்டுமே மாநகர எல்லை இருந்தது. தற்போது பெருமாநகராட்சியாக மாற்றம் செய்துள்ளதின் மூலம் 800 சதுர கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது.

சீரான குடிநீர் வினியோகம் செய்ய வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு என்ற 6 மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டலங்களில் தோண்டப்பட்டுள்ள 6 ஆயிரத்திற்குள் மேற்பட்ட போர்வெல் கிணறுகளும் பெங்களூர் குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரி குடிநீர் திட்டம், திப்பகொண்டனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி ஏரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியாததால், ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுகிறது.

ஏற்கனவே பெருகிவரும் மாசு காரணமாக பூமி வெப்பமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் மிரட்டி வரும் சமயத்தில், நிலத்தடி நீரின் மட்டம் குறைய காரணமாக விளங்கும் ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதை பெருமாநகராட்சி கட்டுப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது.