Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தகுதியற்ற உணவு ஆய்வாளர்கள் 70 பேரை பணிநீக்க கோரி மனு சுகாதார துறைக்கு நோட்டீஸ்

Print PDF

தினமலர் 11.10.2010

தகுதியற்ற உணவு ஆய்வாளர்கள் 70 பேரை பணிநீக்க கோரி மனு சுகாதார துறைக்கு நோட்டீஸ்

மதுரை:மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உணவு பொருள் ஆய்வாளர்களாக பணிபுரியும் தகுதியற்ற 70 பேரை, நீக்க கோரிய மனு குறித்து சுகாதார துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.தென்காசியை சேர்ந்த பிச்சைபாஸ்கர் தாக்கல் செய்த ரிட் மனு: கடையநல்லூர் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிகிறேன். தமிழகத்தில் 192 உணவு பொருள் ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் எண்ணிக்கையை 854 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்காக, ஏற்கனவே துப்புரவு ஆய்வாளர்களாக பணிபுரிவோரை பதவி உயர்வு அளித்து, உணவு பொருள் ஆய்வாளராக நியமிக்க அரசு உத்தரவிட்டது. துப்புரவு ஆய்வாளர்கள் உணவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.


சேலம் தனியார் கல்லூரியில் உணவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்ற 11 பேரும், அண்ணாமலை பல்கலையில் 2007க்கு முன், பி.எஸ்.சி., அப்ளைடு வேதியியல் பட்டம் பெற்ற 32 பேரும் உணவு பொருள் ஆய்வாளர் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்பட்டது.2007க்கு முன், அண்ணாமலை பல்கலையில் பி.எஸ்.சி., அப்ளைடு வேதியியல் பட்டம் பெற்றவர்களையும், சேலம் தனியார் கல்லூரியில் 2005க்கு முன் உணவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றவர்களையும், உணவு பொருள் ஆய்வாளர் பணிக்கு தகுதியற்றவர்களாக சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தெரிவித்தது.

இதனால், உணவு பொருள் ஆய்வாளர் நியமனத்தை அரசு ரத்து செய்தது. இருப்பினும், இப்படி பட்டம், டிப்ளமோ பெற்ற 70 பேர் மாநகராட்சி, நகராட்சிகளில் உணவு பொருள் ஆய்வாளர்களாக பணிபுரிகின்றனர். தகுதியற்ற அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் காஜா மொய்தீன் ஆஜரானார்.மனு குறித்து பதிலளிக்கும்படி சுகாதார குடும்ப நல செயலாளர், இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.சந்துரு உத்தரவிட்டார்..