Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அத்திக்கடவு திட்டம் ஆய்வுக்கு கால நீட்டிப்பு

Print PDF

தினமலர் 13.10.2010

அத்திக்கடவு திட்டம் ஆய்வுக்கு கால நீட்டிப்பு

அன்னூர்:அவிநாசி - அத்திக்கடவு திட்டம் குறித்த விரிவான அறிக்கை அளிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு மூன்று மாதம் அவகாசம் நீட்டிக் கப்பட்டதால், மக்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு மழை குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. குளம், குட்டைகள் மைதானங்களாக மாறி விட்டன. தண்ணீர்
இல்லாமல் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் "லே-அவுட்'களாக மாறி விட்டன. கால்நடை வளர்ப்பும் குறைந்து விட்டது. இதற்கு ஒரே தீர்வு அவிநாசி - அத்திக்கடவு திட்டம் தான். பவானி ஆற்றில் வெள்ளக் காலங்களில் ஏற்படும் உபரி நீரை பில்லூர் அணைக்கு மேல் இருந்து எடுத்து திறந்தவெளி வாய்க்கால் மூலம் கொண்டு சென்றால் அன்னூர், அவிநாசி, காரமடை, பவானிசாகர், நம்பியூர், திருப்பூர், பெருந்துறை, ஊத்துக்குளி, கோபி, சென்னிமலை உள்ளிட்ட வட்டாரங்களை சேர்ந்த பல லட்சம் விவசாயிகள், பொதுமக்கள் பயனடைவார்கள். குளம், குட்டைகளில் நீர் நிரம்பும்.

நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாய பரப்பும், கால்நடை வளர்ப்பும் அதிகரிக்கும். இந்த திட்டத்துக்காக மூன்று மாவட்ட மக்கள் 30 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இத்திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என்று உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில்,இத்திட்டம் குறித்து சென்னையில் மத்திய அமைச்சர் ராஜா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், பொதுப்பணித்துறை முதன்மை செயலர் ராமசுந்தரம் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், "விரிவான திட்ட அறிக்கையை 2011ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பது எனவும், அறிக்கை அரசுக்கு கிடைத்தவுடன், மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு, கொங்கு மண்டல மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.