Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாந்தோன்றிமலையில் 25 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

Print PDF

தினமணி 13.10.2010

தாந்தோன்றிமலையில் 25 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

கரூர், அக்.12: கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை நகராட்சியில் 25.16 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தாந்தோன்றிமலை நகராட்சி அவசரக் கூட்டம் நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. தலைவர் ஜெ. ரேவதிஜெயராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி. வசந்தாமணி, செயல் அலுவலர் செ. தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சிறப்புச் சாலைகள் திட்டத்தில் இயற்கைச் சீற்றத்தால் பழுதான சாலைகளைத் தேர்வு செய்து, சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பணிகளில் ஒப்புதல் பெறப்பட்ட 10 பணிகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பெருமாள் கோயில் தேர் வீதியில் தார்த் தள அபிவிருத்திக்கு 25 லட்சம், அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தார்ச் சாலைக்கு 23.45 லட்சம், குமரன் சாலைப் பகுதியில் சிமென்ட் தளம், வடிகால் அபிவிருத்திக்கு 7.20 லட்சம், ராயனூர் பகுதியில் 3 சிமென்ட் தளங்கள், வடிகாலுக்கு 16 லட்சம், காமராஜ் நகரில் தார்த் தளம் அமைக்க 7.20 லட்சம், பாரதிதாசன் நகர், ஜீவா நகர், திண்ணப்பா நகர், கரூர் - திண்டுக்கல் சாலை, காந்திகிராமம் பகுதிகளில் சிமென்ட் தளம், தார்த் தளம்,வடிகால் பணிகள் அமைப்பது உள்ளிட்ட 10 பணிகளுக்கு 1 கோடியே 6 லட்சத்து 80 ஆயிரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தாந்தோன்றிமலை நகராட்சியின் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிக்காக ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனமான கேஎப்டபிள்யூ நிதியுதவியுடன் நீடித்த கட்டமைப்பிற்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் 25.16 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவது. இதில், நீடித்த கட்டமைப்பிற்கான நிதியுதவி தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 1018.14 லட்சம் கடனாகப் பெறுவது, கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இத் திட்டத்திற்காக கட்டளைப்பகுதியில் தலைமை நீரேற்று நிலையம், நகராட்சிப் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க இடம் வழங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நகராட்சிப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் பொது சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், ஒப்பந்தக் காலம் முடியும் தருவாயில் மேலும் ஓராண்டுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, உறுதி செய்யப்படாததால் தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதேபோல, பொது சுகாதார நலனைக் கருதி, நகராட்சியில் கூடுதலாக 75 துப்புரவுப் பணியாளர்கள் பணியிடங்களை அனுமதிக்க வேண்டி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதுவது என்ற தீர்மானத்திற்கும் திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதம்:

பெ. ரவி (திமுக): பொது சுகாதாரப் பணியில் தினக்கூலி அடிப்படையில் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றாமல் எவ்வாறு பணியாளர்களை நியமிக்கலாம். பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னரே தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டதா?

செயல் அலுவலர் : மண்டல நிர்வாக இயக்குநரிடமிருந்து வரப்பெற்ற உத்தரவின் பேரிலேயே இப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கே. ராதாகிருஷ்ணன் (திமுக): நகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்குகள் அமைப்பதற்காக மின் வாரியத்திற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. எனது வார்டு பகுதியில் 30 விளக்குகள் அமைக்க சுமார் 1.50 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் விளக்குகள் அமைக்கப்படவில்லை.

தலைவர்: இதுகுறித்து மின் வாரியத்திடம் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர். ஏகாம்பரம் (அதிமுக): நகராட்சிப் பகுதிகளில் தற்போது கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை. நகராட்சி சுகாதார துறையிலுள்ள ஆள் பற்றாக்குறையைச் சரிசெய்து கொசு ஒழிப்பு நடவடிக்கையில் நகராட்சி ஈடுபட வேண்டும்.

கே. ராதாகிருஷ்ணன்: 8-வது வார்டு காமராஜ்புரம், முத்தலாடம்பட்டி பகுதியில் குடிநீர்தொட்டி அமைக்க 4 மாதங்களுக்கு முன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை என்றார்.

கூட்டத்தில், உறுப்பினர்கள் செல்வராஜ், ராஜ், கே.பி. பாலுசாமி, எஸ். பாபுகுமார், கே. மாரியம்மாள், பி. பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.