Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"பில்லூர் 2வது திட்ட குடிநீர் கோவைக்கு மார்ச்சில் வழங்கப்படும்':அமைச்சர் பழனிசாமி தகவல்

Print PDF

தினமலர்            29.10.2010

"பில்லூர் 2வது திட்ட குடிநீர் கோவைக்கு மார்ச்சில் வழங்கப்படும்':அமைச்சர் பழனிசாமி தகவல்

மேட்டுப்பாளையம்: ""பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டப்பணிகள் முடித்து, அடுத்தாண்டு மார்ச்சில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்,'' என, அமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புர புனரமைப்பு திட்டத்தில், கோவை மாநகராட்சிக்கு மட்டும் 113 கோடி ரூபாய் மதிப்பில், பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆறு பகுதிகளாக (ஸ்டேஜ்) பிரித்து டெண்டர் விடப்பட்டு, 2008ம் ஆண்டு பணிகள் துவங்கின. பில்லூர் அணை அருகே நெல்லிமரத்தூரில் நீர் சேகரிப்பு கிணறு மற்றும் மலை குகை நுழைவு வரை நீரேற்று பிரதான குழாய் அமைக்கப்படுகிறது. பெரிய கோம்பை மலை குகையிலிருந்து வெள்ளியங்காடு நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை, பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டன; 10 மீட்டருக்கு இரண்டு குழாய்களை இணைக்கும் பணிகள் மட்டும் நடைபெற உள்ளது. வெள்ளியங்காட்டில் 125 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. அங்கிருந்து கட்டாஞ்சி மலை குகை வரை 23.78 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் செல்லும் பிரதானக் குழாய் அமைக்கப்பட்டது.

கட்டாஞ்சி மலையிலிருந்து ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைத் தொட்டி வரை, குடிநீர் செல்லும் பிரதான குழாய் 14.24 கி.மீட்டருக்கு பதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 8.57 கி.மீட்டருக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ராமகிருஷ்ணாபுரத்தில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. பில்லூர் அணைப்பகுதியில் நடைபெறும் கிணறு தோண்டும் பணிகளையும், வெள்ளியங்காட்டில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை தமிழக அமைச்சர் பழனிசாமி, கலெக்டர் உமாநாத், மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, கண்காணிப்பு பொறியாளர் பூபதி, துணை மேயர் கார்த்திக் உட்பட மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் குழுவினர் கூறியதாவது: கோவை மாநகராட்சிக்கு மட்டும் "ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தில்' 113.74 கோடியில், தனியாக பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இதில் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் மானியமாக வழங்குகிறது. மாநகராட்சி 30 சதவீதம் தொகையை போட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பணி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆனதால், திட்ட மதிப்பீடு 140 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதில் வனத்துறையிடம் இருந்து 1.83 ஹெக்டர் நிலம் வாங்கி அதில் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கு பதிலாக இரண்டு மடங்கு இடம் வருவாய்த்துறையிடம் விலைக்கு வாங்கி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்பகுதியில் குடியிருந்து வரும் 11 ஆதிவாசி குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப, நீரேற்று நிலைத்தில் வேலை வழங்கப்படும். குழாய்கள் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள 10 சதவீதம் பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என்றனர்.அமைச்சர் பழனிசாமி கூறுகையில்,"" பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளன. அடுத்தாண்டு மார்ச்சில் திட்டம் முடித்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். விரைந்து பணிகளை முடிக்கும்படி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.