Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பருவமழை தீவிரம்: சென்னை ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக உயர்கிறது

Print PDF

தினமணி                01.11.2010

பருவமழை தீவிரம்: சென்னை ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக உயர்கிறது

சென்னை, அக்.31: வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருப்பதை அடுத்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி உள்ளிட்ட 4 முக்கிய ஏரிகளின் நீர் அளவு வேகமாக உயர்ந்து வருகிறது.

மொத்தம் 11 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளின் நீர் அளவு, இப்போது 5 டி.எம்.சி.யாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர் அளவு வேகமாக உயர்ந்து வருகிறது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் விநாடிக்கு 696 கன அடி என்ற அளவில் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

"கண்டலேறு அணையில் போதிய நீர் கையிருப்பு உள்ளதால், கிருஷ்ணா நதிநீர் வரத்து மேலும் அதிகரிக்கும். எனவே, அடுத்த ஆண்டு வரையில் சென்னை நகருக்கு குடிநீர் பிரச்னை வராது' என பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணா நதிநீர் வரத்து மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழையைத் தொடர்ந்து, பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் அளவு வேகமாக உயர்ந்து வருகிறது. மொத்தம் 3.2 டி.எம்.சி. கொள்ளவு கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செங்குன்றம் ஏரிக்கு விநாடிக்கு 250 முதல் 300 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதுபோக பூண்டியில் உள்ள சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்துக்கு விநாடிக்கு 10 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இப்போது நீர்த்தேக்கத்தில் 1.6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

ஏரிகளின் நீர் அளவு (மில்லியன் கன அடியில்): பூண்டி - 1,682, சோழவரம் - 409, செங்குன்றம்-1,408, செம்பரம்பாக்கம் - 1,506. 4 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 5,005 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்ற ஆண்டு இதே நாளில் நான்கு ஏரிகளிலும் சேர்த்து 2,937 மில்லியன் கன அடி நீர்தான் (2.9 டி.எம்.சி.) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.