Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாரிய மேலாண்மை இயக்குனர் உறுதி குடிநீர் தட்டுப்பாடு ஜூலை வரை இருக்காது

Print PDF

தினகரன்                 04.11.2010

வாரிய மேலாண்மை இயக்குனர் உறுதி குடிநீர் தட்டுப்பாடு ஜூலை வரை இருக்காது

சென்னை, நவ.4: சென்னை நகருக்கு அடுத்த ஆண்டு ஜூலை வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்லக்கானி தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது.

மேயர் பேசுகையில், ‘மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ராஜேஷ்லக்கானி குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்று சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் மூலம் புகார்கள் குறைந்துள்ளதுஎன்றார்.

மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பேசுகையில், ‘வாரியத்தின் பொறியாளர்களும் மாநகராட்சி மண்டல அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டும்என்றார்.

கூட்டத்திற்கு குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்லக்கானி முன்னிலை வகித்தார். மாநகராட்சி மன்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், மண்டலக்குழுத் தலைவர்கள், மண்டல அதிகாரிகள், குடிநீர் வாரியத்தின் பகுதி பொறியாளர்கள் பங்கேற்றனர்.

மண்டலக்குழுத் தலைவர்கள் பேசுகையில், ‘குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்படுகிறது. சில இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. சில இடங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் குடிநீர் குழாய்கள் மாற்றப்படவில்லை. கழிவுநீர் அகற்றும் நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்என்று அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதற்கு ராஜேஷ்லக்கானி பதில் அளித்து பேசியதாவது:

கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது. இதற்காக வாரியம் சார்பில் 59 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் 17 இயந்திரங்கள் புதிதாக வாங்கப்படவுள்ளது. தினமும் ஒரு ஷிப்ட் முறையில் அடைப்பு எடுக்கும் பணிகள் நடக்கிறது. இனிமேல் 2 ஷிப்ட்கள் மூலம் அடைப்பு எடுத்து உடனடி தீர்வு காணப்படும்.

கடந்த ஒரு மாதத்தில் 250 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பாதைகளில் தூர்வாரப்பட்டுள்ளது. கழிவுநீர் அகற்றும் நிலையங்களில் உள்ள மின் மோட்டார்கள் நல்ல முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் போன்ற அதிக குடியிருப்புகள் உள்ள இடங்களில் சிறிய அளவிலான கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்படும். குடிநீரில் கழிவுநீர் கலப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மண்டல அளவில் கவுன்சிலர்கள் பங்கேற்கும் வார்டு குழு கூட்டங்களில் வாரியத்தின் பகுதி பொறியாளர், வார்டு பொறியாளர்கள் இனி பங்கேற்பார்கள். அவர்கள் குறைகளை கேட்டு உடனடி தீர்வு காண்பார்கள். வாரிய அதிகாரிகளும் கவுன்சிலர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறைகளை கேட்டு தீர்வு காண்பர். எஸ்எம்எஸ் மூலமும் புகார் தெரிவிக்கலாம்.

குடிநீர் குழாய்களும் மேம்படுத்தப்படுகிறது. குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பகுதி எதுவும் இருந்தால் அந்த இடங்களுக்கு இணைப்பு கொடுக்கப்படும். இதற்காக சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டும் நிலை ஏற்பட்டால் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறப்படும். தற்போதுள்ள நிலவரப்படி சென்னைக்கு அடுத்த ஆண்டு ஜூலை வரை குடிநீர் வினியோகம் செய்வதில் பிரச்னை இருக்காது.

இவ்வாறு ராஜேஷ்லக்கானி தெரிவித்தார்.

துணை மேயர் சத்தியபாமா, துணை ஆணையர் (பணிகள்) தரேஸ் அகமது, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி ஆகியோர் பங்கேற்றனர்.