Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொள்ளாச்சியில் தினமும் குடிநீர் வழங்குவது எப்படி சாத்தியமானது?

Print PDF

தினமலர்                      07.11.2010

பொள்ளாச்சியில் தினமும் குடிநீர் வழங்குவது எப்படி சாத்தியமானது?

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் குழாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை, புதிதாக பம்பிங் ஸ்டேஷன் துவங்கவில்லை. ஆனால் தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் எப்படி சாத்தியமானது என்பதை தெரிந்து கொண்டால் மக்களிடம் குடிநீர் சிக்கனத்திற்கு விழிப்புணர்வு ஏற்படும்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு கடந்த 1948ல் முதல் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆழியாறு ஆற்றில் அம்பராம்பாளையத்தில் இருந்து தண்ணீரை பம்பிங் செய்து, சுத்திகரித்து பொள்ளாச்சியில் வெங்கடேசாகாலனியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கு ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட தொட்டியில் குடிநீர் தேக்கப்படுகறது. அங்கிருந்து பம்பிங் செய்யப்பட்டு மகாலிங்கபுரத்திலுள்ள 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. முதல் குடிநீர் திட்டத்தில் தினமும் 24 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செய்யப்பட்டது.

அதையடுத்து 1972ல் இரண்டாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திட்டத்தில் அம்பராம்பாளையத்தில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் வெங்கடேசாகாலனியில் உள்ள ஒன்பது லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியில் தேக்கப்படுகிறது. இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 20 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செய்யப்பட்டது.

கடந்த 1996ல் மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தில் வெங்கடேசாகாலனியில் 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டிக்கும், ஜோதிநகரில் மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டிக்கும், மரப்பேட்டை பூங்காவில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிக்கும், சுதர்சன் நகரில் 10.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிக்கும், மகாலிங்கபுரத்தில் 10.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

மூன்றாவது திட்டத்தில் தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், தினமும் 60 லட்சம் லிட்டர் மட்டுமே பம்பிங் செய்யப்பட்டது. நகராட்சியில் தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப திருப்திகரமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால், குடிநீர் திட்டத்தை மேம்படுத்தி வினியோகத்தை முறைப்படுத்த திட்டமிடப்பட்டது. அதற்காக 10 கோடி ரூபாயில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நகராட்சியில் உள்ள 36 வார்டுக்கும் சரியான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2009ல் கொண்டு வரப்பட்ட குடிநீர் மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக நீரேற்று நிலையம் அமைக்கப்படவில்லை. ஆனால், பொள்ளாச்சி வி.கே.வி., லே-அவுட்டில் ஐந்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும், கே.ஆர்.ஜி.பி., நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல்நிலைத்தொட்டியும், சோமசுந்தராபுரம் லே-அவுட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியும் கட்டப்பட்டது.

ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் எட்டு தொட்டிகளுடன், புதிதாக கட்டப்பட்ட மூன்று தொட்டிகளும் இணைக்கப்பட்டது. மொத்தமுள்ள 11 குடிநீர் தொட்டிகளுக்கு தினமும் 86.954 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டது. குடிநீரை முறைப்படுத்த 32 கிலோமீட்டருக்கு பகிர்மானக்குழாய்கள் அமைக்கப்பட்டன.

குடிநீர் தொட்டிகள் எண்ணிக்கையை அதிகரித்து, பகிர்மான குழாய்கள் அமைத்தது போன்று நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்களும் மாற்றி அமைக்கப்பட்டன. முதல் குடிநீர் திட்டத்தில் 135 எச்.பி., திறனுள்ள மோட்டாரும், இரண்டாவது திட்டத்தில் 60 எச்.பி., திறனுள்ள மோட்டாரும், மூன்றாவது திட்டத்தில் 150 எச்.பி., திறனுள்ள மோட்டரும் பொருத்தப்பட்டிருந்தது.

தற்போது பழைய மின்மோட்டார்கள் மாற்றப்பட்டு 220 எச்.பி., திறனுள்ள மூன்று மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் ஒரே நேரத்தில் இரண்டு மோட்டார்கள் மட்டும் இயங்கும். ஒரு மோட்டார் மாற்றாக வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க 80 எச்.பி., மற்றும் 40 எச்.பி., திறனுள்ள இரண்டு மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி நகராட்சியில் 95,236 பேர் வசிக்கின்றனர். ஒரு நபருக்கு 135 லிட்டர் வீதம் கணக்கிடும் போது, தினமும் 128 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. மின்மோட்டார்களை மாற்றி அமைத்துள்ளதால் தினமும் 160 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தேவைக்கு அதிகமாக குடிநீர் கிடைப்பதால் அனைத்து பகுதிக்கும் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தினமும் 210 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செசய்ய முடியும். தேவைக்கு அதிகமாக உள்ளதால் 160 லட்சம் லிட்டர் மட்டுமே பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. நகராட்சியில் மொத்தமுள்ள 270 பொதுக்குடிநீர் குழாய்கள் மூலமும், 12,762 வீட்டு இணைப்புகள் மூலமும் குடிநீர் சீராக பகிர்ந்து வழங்கப்படுகிறது.

தினமும் ஒன்றரை மணி நேரம் அதிக அழுத்தத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. புதிய மின்மோட்டார்கள் மாற்றப்பட்டுள்ளதால் தேவைக்கேற்ப குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. வரும் 2035ம் ஆண்டு வரையிலும் பொள்ளாச்சியில் குடிநீர் பிரச்னை இருக்காது.

மின்கட்டணமாக 14.25 லட்சம் ரூபாய் : பொள்ளாச்சி நகராட்சியில் இதுவரை இருந்த குடிநீர் திட்டத்தின் மூலம் மாதம் 2.29 லட்சம் யூனிட் மின் செலவானது. மின் செலவுக்காக மாதம் 12 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது மின்மோட்டர்களின் எண்ணிக்கையை குறைத்து, திறனை அதிகப்படுத்தியுள்ளதால் மாதம் 2.43 லட்சம் யூனிட் மின் செலவாகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் மாதத்திற்கு 14.25 லட்சம் ரூபாய் மின் கட்டணமாக செலுத்துகிறது.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "குடிநீர் மேம்பாட்டு திட்டத்தினால் மின்கட்டணம் அதிகரிக்கவில்லை. அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகரித்திருக்கும். தற்போது, மின்கட்டணத்தில் யூனிட்டுக்கான தொகையை அதிகரித்துள்ளனர். இதுவரை ஒரு யூனிட்டுக்கு 3.50 ரூபாய் கட்டணமாக இருந்தது. தற்போது, ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால் மின் கட்டணம் அதிகரித்துள்ளது' என்றனர்.