Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரயமாகும் நீரை சேமித்தால் பயன் தானே...! கோத்தகிரி நகர மக்களின் எதிர்பார்ப்பு இது தான்...

Print PDF

தினமலர்                      08.11.2010

விரயமாகும் நீரை சேமித்தால் பயன் தானே...! கோத்தகிரி நகர மக்களின் எதிர்பார்ப்பு இது தான்...

கோத்தகிரி : கோத்தகிரி நகரப் பகுதி மக்களின் நீர் வினியோகத்துக்கு பயன்படும் ஈளாடா தடுப்பணையை தூர் வாரினால், விரயமாகும் நீரை சேமிக்க முடியும்.

கோத்தகிரி நகரப் பகுதியில் வசிக்கும் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, 1972ம் ஆண்டு கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், எல்..சி., மூலம் 20 லட்சம் கடன் பெற்று, ஈளாடா தடுப்பணை உருவாக்கப்பட்டது. சீரான வினியோகத்துக்காக, தடுப்பணையில் இருந்து வரும் நீரை, கேர்பெட்டா புதூர் பகுதியில் உள்ள "பம்ப்' அறையில் சுத்திகரித்து, சக்திமலை பகுதியில் "மெகா' நீர் தேக்கத் தொட்டியில் சேமித்து வினியோகிக்கப்படுகிறது.

நாளடைவில் அதிகரித்த மக்கள் தொகை மற்றும் வணிக நிறுவனங்களால், நீர் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டது. அதே நேரத்தில், தடுப்பணையில் இருந்து விரயமாகும் நீரை சேமிக்க, போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், 1.50 கோடி மதிப்பில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம், "மாற்று குடிநீர் திட்டம்' செயல்படுத்தப்பட்டது; தடுப்பணையில் இருந்து "மெகா' குழாய்கள் இணைக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட போது, போதிய பயன் தரவில்லை. திட்டமிடாதப் பணிகளால், அரசின் நிதி விரயமாகியுள்ளது என, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது ஒருபுறம் இருக்க, கோத்தகிரி நகரப் பகுதியில் நிலவும் நீர் பற்றாக்குறையை சமாளிக்க, அளக்கரை குடிநீர் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேரூராட்சி மன்றக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், திட்டத்தை செயல்படுத்த செலவாகும் 4 கோடி ரூபாயில், ஒரு பங்குத் தொகையை பேரூராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும் என, குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

பேரூராட்சியில் நிலவும் நிதிப் பற்றாக்குறையால், திட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க, அளக்கரை குடிநீர் திட்டத்தை நடப்பாண்டு செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, சமீபத்தில் நீலகிரிக்கு வருகை தந்த துணை முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.தேவையான நிதி வழங்குவதாக, துணை முதல்வர் உறுதியளித்துள்ளதை அடுத்து, மதிப்பீடு மேற்கொள்ள கணிசமான நிதியும் ஒதுக்கப்பட்டது.

திட்டம் செயல்படும் பட்சத்தில், கோத்தகிரி நகரப் பகுதி மக்களுக்கு தடையின்றி நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஈளாடா தடுப்பணையை தூர்வாரி, விரயமாகும் நீரை சேமித்து, வறட்சி நாட்களில் தடையின்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.