Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் சேகரிக்க 158 இடங்களில் ஆழ்துளை : நிலத்தடி நீர்மட்டம் உயர்வு; "சிறுதுளி' பெருமிதம்

Print PDF

தினமலர்                  08.11.2010

மழைநீர் சேகரிக்க 158 இடங்களில் ஆழ்துளை : நிலத்தடி நீர்மட்டம் உயர்வு; "சிறுதுளி' பெருமிதம்

கோவை : கோவை நகரில் வீணாகும் மழைநீரை நிலத்தடியில் செலுத்த 158 இடங்களில் ஆழ்துளைகளை அமைத்து, மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தியது "சிறுதுளி' அமைப்பு. இதன்பயனாக, நகரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கோவையில் மழைநீர் சேகரிப்புக்கான விரிவான திட்டங்கள் ஏதும் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களால் இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால், மழையின்போது சாலையில் வழிந்தோடும் நீர் சாக்கடையில் கலந்து குளம், குட்டைகளில் சங்கமித்து முக்கிய நீராதாரங்களை மாசுபடுத்தியது. அரசு அலுவலக கட்டடங்கள், குடியிருப்பு வளாகங்கள், சாலைகள், பொது இடங்களில் சேரும் மழைநீரை நிலத்துக்குள் செலுத்தினால் மட்டுமே, நிலத்தடி நீர் மட்டம் உயரும்; இதன்பயனாக, போர்வெல் மற்றும் விவசாய கிணறுகளிலும் நீர் ஊறும். இதற்கான திட்டங்களை அமல்படுத்த களத்தில் இறங்கிய "சிறுதுளி' சேவை அமைப்பு, மாநகரின் பல இடங்களிலும் ஆழ்துளையிட்டு மழைநீரை நிலத்தடியில் செலுத்தும் திட்டத்தை அமல் படுத்தியது. மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள் இருக்கும் பகுதிகளில் வழிந்தோடும் மழை நீரை நிலத்தடியில் செலுத்த ஆழ்துளையிட, மாநகராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தது.

மாநகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு மண்டலத்துக்கும் உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி கட்டடங்கள் இருக்கும் பகுதிகளை தேர்வு செய்தது. வடக்கு மண்டலத்தில் 37 இடங்களிலும், தெற்கு மண்டலத்தில் 38 இடத்திலும், கிழக்கு மண்டலத்தில் 37 இடத்திலும், மேற்கு மண்டலத்தில் 38 இடத்திலும் நிலத்தில் ஆழ்துளை அமைத்து, மழைநீரை உட்செலுத்தி வருகிறது. இத்திட்டத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் 50 லட்சம் ரூபாயை ஒதுக்கியது; பணிகளை சிறுதுளி அமைப்பு மேற்கொண்டது. இதையடுத்து, மத்திய நீர்வள அமைச்சக இணைச்செயலர் ராம்மோகன் மிஸ்ரா, மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, கலெக்டர் உமாநாத் ஆகியோரை கொண்ட குழு கோவையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான ஆய்வு மேற்கொண்டது.

கோவையிலுள்ள அரசு அலுவலகங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றின் வளாகங்களில் மழைநீர் சேகரிப்புக்கான ஆழ்துளைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மாவட்ட அளவில் தொழில்நுட்ப கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் தலைவராக கலெக்டர், உறுப்பினர்களாக மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இக்குழுவினர், கோவையில் மழைநீர் வடிகால் அமைக்கவேண்டிய இடங்களை தேர்வு செய்து மாநில கமிட்டி வாயிலாக மத்திய அரசுக்கு அனுப்பியது. அதன்பயனாக, மத்திய நீர்வள அமைச்சகம் முதற்கட்டமாக 70 லட்சம் ரூபாயை "சிறுதுளி' அமைப்புக்கு வழங்கியது.

இந்நிதியில் கோவையிலுள்ள அரசு அலுவலகங்கள், அரசு கட்டட பகுதிகள், அரசு அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகள் உள்பட 158 இடங்களில் மழைநீர் வடிகாலுக்கான ஆழ்துளைகள்அமைக்கப் பட்டன. கடந்த இரண்டு வாரமாக பெய்த தொடர் மழையின் போது வெள்ளம் வழிந்தோடி ஆழ்துளைகளின் வழியே நிலத்தடியில் சேர்ந்தன. இதன்பயனாக, கோவை நகரின் சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக "சிறுதுளி' தெரிவித்துள்ளது. "சிறுதுளி' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் கூறுகையில், ""சிறுதுளி சார்பில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகாலுக்கென்று ஆழ்துளை அமைத்துள்ளோம். ""இதன்வழியே மழைநீர் எளிதாக நிலத்துக்குள் சென்றுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக உயர்ந்துள்ளது. இதே போன்று, அரசு மற்றும் தனியார் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டால், நிலத்தடி நீர் மட்டம் இன்னும் வேகமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை,'' என்றார்.