Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வானிலை மாற்றத்தால் சிறுவாணி அணை நிரம்புமா? : குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்

Print PDF

தினமலர்                   09.11.2010

வானிலை மாற்றத்தால் சிறுவாணி அணை நிரம்புமா? : குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்

கோவை : தற்போது நிலவும் வானிலை சூழலுக்கு சிறுவாணி அணை நிரம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. வேறு ஏதாவது புயல் மீண்டும் அடித்தால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு மழைபொழிந்தால் அணை நிரம்பும், என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறினார். கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி, பில்லூர் அணை ஆகியவை உள்ளன. கோவை மாநகராட்சியின் ஒரு பகுதி முழுமைக்கும் பில்லூர் அணையில் இருந்து வரும் குடிநீரும், மற்ற மூன்று பகுதி முழுமைக்கும் சிறுவாணி அணையில் இருந்து வரும் குடிநீரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. கேரள மாநில எல்லையில் அமைந்திருந்தாலும் தமிழகத்திற்கே சிறுவாணி அணையிலிருந்து வரும் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு நாளைக்கு அணையிலிருந்து 100 மில்லியன் லிட்டர் சிறுவாணி நீர் எடுக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிக்கு 75 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீரும், வழியோர கிராமங்களுக்கு 25 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீரும் அன்றாடம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையை நம்பியே இந்த அணை உள்ளது. ஆண்டொன்றிற்கு இரு பருவ காலத்திலும் அணை நிறைந்துவிடும். அணையில் இருக்கும் தண்ணீரை கொண்டே ஆண்டுமுழுக்க தண்ணீர் சப்ளை செய்யப்படும்.
இந்த ஆண்டு தென்மேற்குப்பருவ மழை எதிர்பார்த்த பலனை கொடுக்காவிட்டாலும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அணை நிரம்பி வழிந்தது. தற்போது துவங்கிய வடகிழக்கு பருவமழை காலத்திற்கும் எப்படியும் சிறுவாணி அணை நிரம்பிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அணை நிரம்பவில்லை. ஆண்டுதோறும் வழக்கமாக பெய்யும் பருவமழையில் தற்போது மாறுபாடு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை பெய்யும் காலம் சற்று தள்ளிப்போனது. வடகிழக்கு பருவமழை பெய்யவேண்டிய காலம் முன் கூட்டியே வந்து விட்டது. இதனால் அணையில் வழக்கமாக இருக்கும் தண்ணீரின் கொள்ளளவில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழையாக இருந்தாலும், வடகிழக்குப் பருவமழையாக இருந்தாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அணை நிரம்பும் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறும். ஆனால் இந்த பருவத்தில் எப்படியும் அணை நிறையும் என்று நினைத்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அணைக்கு பாம்பாறு, பட்டியாறு, முத்தியாறு, சின்னாறுகளில் இருந்து வரும் தண்ணீர் வரத்து குறைந்தது.அணையின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 878.50 மீட்டர். நேற்று மாலை 4.00 மணி நேர நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 874.50 மீட்டராக இருந்தது. இனியும் நிரம்புவதற்கு 4 மீட்டர் தூரம் உள்ளது. ஆனால் அணையை அடுத்து அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பம்ப்புகள் நான்கும் தண்ணீரில் மூழ்கியே காணப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப்பொறியாளர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. புயல் இனியும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும், எப்படியும் மழை பெய்யும் என்று நினைத்தோம். அது நடக்கவில்லை."ஜல்' புயலுக்கு மாற்றாக வேறு ஏதாவது புயல் வந்தால், வானிலையில் வேகமான மாற்றம் ஏற்படும். மழை தொடர்ந்து பெய்யும். சிறுவாணி அணை நிரம்புவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதை தவிர அணை நிரம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. தற்போதுள்ள தண்ணீரை வைத்தே வரும் கோடையை சமாளிக்க வேண்டும், என்றார்.