Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருதுநகர், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் ரூ173 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன்                         11.11.2010

விருதுநகர், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் ரூ173 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்

சென்னை, நவ. 11: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் ரூ173 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று பேரவையில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமசாமி, வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ173 கோடி திட்ட மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ராமசாமி:

எங்களுடைய ஒன்றிய பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அறிவித்த துணை முதல்வருக்கும், எங்களுடைய மாவட்ட அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தோடு ராஜபாளையம் நகராட்சியை இணைப்பதற்கான முயற்சியை துணை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.

மு..ஸ்டாலின்:

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் மூலமாக கலந்து ஆலோசித்து, திட்ட மதிப்பீடு சீராய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த பணிகள் விரைவில் முடிவடைய இருக்கிறது. எந்த தேதியில் இது தொடங்கப்படும் என்று உறுப்பினர் கேட்கிறார். வரும் 29ம் தேதி, அதற்குரிய அடிக்கல் நாட்டுவிழா நடைபெற இருக்கிறது.

எனவே, இந்த பணிகள் முடிவடையும் நேரத்தில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக வத்திராயிருப்பு ஒன்றியத்தில் இருக்கக்கூடிய குடிநீர் பற்றாக் குறை தீரும். எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தாமிரபரணி ஆற்றை நீராதார மாகக் கொண்டு முக்கூடல் அருகே நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய செய்தூர், செட்டியார்பட்டி, மம்சாபுரம், வத்திராயிருப்பு, சுந்தரபாண்டிய புரம், வட புதுப்பட்டி கொடிக்குளம் ஆகிய 7 பேரூராட்சிகள் மற்றும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியங்களில் இருக்கக்கூடிய 395 குடியிருப்புகளில் இருக்கும் 3 லட்சத்து 84 ஆயிரத்து 315 மக்கள் பயன் பெறக்கூடிய வகையில் இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படவிருக்கிறது. இந்த திட்டத்துடன் ராஜபாளையம் நகராட்சியை இணைப்பதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார்.

Last Updated on Thursday, 11 November 2010 05:55