Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு காரைக்குடி நகராட்சியில் சீராக தண்ணீர் விநியோகிப்பதில் சிக்கல்

Print PDF

தினகரன்                        15.11.2010

மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு காரைக்குடி நகராட்சியில் சீராக தண்ணீர் விநியோகிப்பதில் சிக்கல்

காரைக்குடி, நவ. 15: காரைக்குடி நகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் திடுடப்படுவதால் சீராக தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை.

காரைக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சியின் குடிநீர் தேவைக்காக கோவிலூர் சாலையில் உள்ள சம்பை ஊற்று நீரேற்று நிலையத்தில் இருந்து நாள்தோறும் 75 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மகர்நோன்பு திடல், கல்லுகட்டி செக்காலை, திருச்சி ரோடு, புதிய கோர்ட் அருகே ஆகிய பகுதிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகராட்சி சார்பில் 11 ஆயிரத்து 228 வீடுகளுக்கு, 340 பொதுக்குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது.

குறிப்பிட்ட சில வீடுகள், வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்களில் திருட்டுத்தனமாக குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஊழியர் ஒருவர் கூறுகையில், ``வீடு, வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவதால் பிற பகுதிகளுக்கு சீராக விநியோகம் செய்யமுடியவில்லை. குடிநீர் திருட்டை தடுக்க நகராட்சி சார்பில் விரைவுப்படை அமைக்கப்பட்டது.

தற்போது படை செயல் இழந்துவிட்டது. குடிநீர் திடுபவர்களின் மின்மோட்டாரை பரிமுதல் செய்வதோடு, குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். நகர்மன்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுகிறாதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

காரைக்குடியை சேர்ந்த ராமானுஜம் கூறுகையில், ``முன்பு குடிநீர் திருட்டை தடுக்க விரைவுப்படை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது நடவடிக்கை ஏதும் இல்லாதாதால் எவ்வித பயமும் இல்லாமல் குடிநீர் திருடுகின்றனர். இதனால் தாழ்வான பகுதிகளுக்கு சுத்தமாக குடிநீர் வருவதில்லை. சிறியவகை அடிபம்பை பொறுத்தி தண்ணீர் எடுக்க நேரிடுகிறது. இவ்விஷயத்தில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.