Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: தொகுப்பு 3, 5 பணிகள் ஜனவரியில் தொடங்கப்படும்- ஆட்சியர்களின் ஆய்வுக்கூட்டம்

Print PDF

தினமணி              20.11.2010

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: தொகுப்பு 3, 5 பணிகள் ஜனவரியில் தொடங்கப்படும்- ஆட்சியர்களின் ஆய்வுக்கூட்டம்

தருமபுரி, நவ.19: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் தொகுப்பு 3 மற்றும் 4-க்கான பணிகள் 2011-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்படும் என இரு மாவட்ட ஆட்சியர்களின் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்கள் இரா.ஆனந்தகுமார் (தருமபுரி), வி.அருண் ராய் (கிருஷ்ணகிரி) ஆகியோர் தலைமை வகித்தனர்.

இத்திட்டத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துதல், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி குழாய் அமைத்தல், சாலையோரங்களில் குழாய் அமைத்தல், வனத்துறை மற்றும் ரயில்வே துறைகளுக்கு சொந்தமான இடங்களில் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குழாய் அமைத்தல் போன்ற முதல்கட்டப் பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

இப்பணிகளுக்குத் தேவையான அனுமதி அளித்தல், தடையில்லா சான்று வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக இரு மாவட்ட ஆட்சியர்களும் ஆய்வு செய்தனர். திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்ட தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் விளக்கினார்.

முதல்தொகுப்பில், காவிரி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கான இறைப்பான் கிணற்றின் பக்கவாட்டுச் சுவர் கான்கிரீட் பணி முடிக்கப்பட்டுள்ளது. இறைப்பான் கிணற்றில் இருந்து நீர்சுத்தகரிப்பு நிலையத்துக்கு 1,500 மி.மீ. விட்டமுள்ள இரும்புக்குழாய்கள் மூலம் நீர் உந்தப்படவுள்ளது. இக்குழாயின் மொத்த நீளம் 6,200 மீட்டர்.

இக்குழாய்கள் முழுமையாக தருவிக்கப்பட்டு, பதித்து, குழாய்களை இணைத்தல், இணைப்புத் தரம் பரிசோதித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 1,556.63 மீ நீளத்துக்கு பதித்து இணைக்கப்பட்டுள்ள குழாய்களை நீரழுத்த பரிசோதனை செய்வதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

குளோரின் சேர்க்கும் கட்டடம் மற்றும் ரசாயனப் பொருள்கள் கிடங்கு கட்டடம் கட்டும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 280 மீ நீளமுள்ள சுற்றுச்சுவர் மற்றும் 5.45 மீ உயரமுள்ள 208 தூண்களுக்கான கான்கிரீட் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன.

முதல்தொகுப்பை முடிப்பதற்கான காலக்கெடு 30 மாதங்கள் என்றாலும் இப்பணியை 24 மாதங்களுக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேபோல தொகுப்பு 2-க்கான பணிகள் 24 மாதங்களுக்குள் முடிக்கப்படும். தொகுப்பு 4-க்கான பணிகளும் 24 மாத காலத்துக்குள் முடிக்கப்படும். தொகுப்பு 3 மற்றும் 5-க்கான பணிகள் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர்கள் பழனிசாமி, மனோகரன், செயற்பொறியாளர் ராசப்பன், பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் கெüதம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ருக்மணி, சுகாதாரத்துறை உதவி இயக்குநர் அய்யனார் உள்பட பலர் பங்கேற்றனர்.