Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினமும் 83 லட்சம் லிட்டர் தண்ணீர் ரூ10 கோடியில் புதிய குடிநீர் திட்டம் அடுத்த மாதம் துவங்குகிறது

Print PDF

தினகரன்               23.11.2010

தினமும் 83 லட்சம் லிட்டர் தண்ணீர் ரூ10 கோடியில் புதிய குடிநீர் திட்டம் அடுத்த மாதம் துவங்குகிறது

நாமக்கல், நவ.23: நாமக்கல் நகராட்சியில் ரூ10 கோடியில் செயல்படுத்தப்படும் புதிய குடிநீர் திட்டம் மூலம் தினமும் 83 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இந்த திட்ட பணிகள் அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

இது குறித்து, நாமக்கல் நகராட்சி தலைவர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் நகராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சாலைகள் சீரமைப்பு மற்றும் புதிய சாலைகள் அமைக்க ரூ8 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு நகராட்சி பகுதியில் உள்ள 30 வார்டுகளில் தேவையான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்ட மாக பாதாளசாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த பகுதியில் சாலைகள் சரி செய்யப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை பொறுத்த வரை 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

நாமக்கல் நகராட்சியில் ரூ10 கோடியில் நடைபெற்று வரும் புதிய குடீநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. இந்த திட்டத்துக்காக மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. மோகனூரில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்துக்கு மின் இணைப்பு பெறப்பட்டு தற்போது ஆற்றில் இருந்து நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் சோதனை ஓட்டம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்துக்காக மோகனூர் காவிரியில் தண்ணீர் எடுக்கப்படும் இடத்தில் இருந்து நாமக்கல் வரை 20 கி.மீ தூரத்துக்கு பைப் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நகராட்சிக்கு தினமும் 83 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதற்காக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர 5 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டதால் புதிய குடிநீர் திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்பட துவங்கும். நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனம், தனியார் நிகழ்ச்சிகளின் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் இடங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளுக்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி ஏதும் பெறத்தேவையில்லை.

அனுமதியின்றி பொது மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் நகராட்சி பணியாளர்கள் மூலம் முன்அறிவிப்பின்றி அகற்றப்படும். இவ்வாறு நகராட்சி தலைவர் செல்வராஜ் தெரிவித்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் பாலச்சந்திரன் உடனிருந்தார்.