Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு :குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Print PDF

தினமலர்             24.11.2010

பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு :குடிநீர் வினியோகம் நிறுத்தம்

கோவை: வெள்ளமடை கிராமத்தில் பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மண்டலப்பகுதிகளில் இன்று ஒரு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பில்லூர் அணையிலிருந்து மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு, கோவை மாநகருக்கு குடிநீர் 1,500 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்களின் வழியாக கொண்டுவரப்படுகிறது. மாநகராட்சி எல்லையிலுள்ள மேல்நிலைத்தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு, கிழக்கு மற்றும் வடக்கு மண்டலப் பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மாலை 4.45 மணிக்கு பில்லூர் அணையிலிருந்து கோவைக்கு வரும் பிரதான குழாயில், சர்கார்சாமக்குளம் ஒன்றியம் வெள்ளமடை கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது.

தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபாலகிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர்கள் வேலுசாமி, நெல்சன், உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இரு குழாய்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரும்பால் இணைக்கும் பைப் பொருத்தும் பணி நடந்தது. 12 மணி நேரத்திற்கு பின்பே மீண்டும் தண்ணீர் பம்ப் செய்யப்படும். அதன் பின், குடிநீர் விநியோகம் செய்யப்படும். அதனால் இன்று ஒரு நாளைக்கு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மண்டலப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று கோவைமாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று சீராகும்: "பில்லூர் குடிநீர்த் திட்ட சேவை இன்று சீராகும்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கலெக்டர் உமாநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பில்லூர் குடிநீர்த் திட்டத்தில், நீர் உந்துதல் நேற்று மாலை அவசர கால பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டது. பணிகள் நிறைவு செய்யப்பட்டு, நீர் உந்துதல் மற்றும் வினியோகம் இன்று மதியத்தில் இருந்து வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.