Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் கட்டணம் செலுத்தாமல் அலட்சியம்

Print PDF

தினமலர்              24.11.2010

குடிநீர் கட்டணம் செலுத்தாமல் அலட்சியம்

சேலம்: சேலம் மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.சேலம் மாநகராட்சிக்கு ஆத்தூர், நங்கவள்ளி ஆகிய இரண்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 750 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 84 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகை ஐந்தாயிரத்தில் இருந்து ஏழாயிரத்து 500 ரூபாயாகவும், குடிநீர் கட்டணம் 100 ரூபாயில் இருந்து150 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது.

மாநகர பகுதியில் குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. அதனால், உயர்த்தப்பட்ட டிபாஸிட் தொகை மற்றும் கட்டணம் குறித்து கவலைப்படாமல் புதிய குடிநீர் இணைப்பு வேண்டி
நிறைய பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்ற பலர் ஆண்டுக்கணக்கில் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக நிலுவை தொகையை செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பலரது வீடுகளுக்கு நேரடியாக சென்றும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். ஒரு சிலர் மட்டுமே நிலுவை தொகையை செலுத்தினர். பெரும்பாலானோர் அலட்சியம் காட்டினர்.
அதனால், கடந்த இரண்டு நாட்களாக சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட 19 வது வார்டில் இரண்டு ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தாமல் அலட்சியம் காட்டியவர்களின் பட்டியலுடன் சென்ற அதிகாரிகள், துண்டிப்பு நடவடிக்கையில் இறங்கினர்.

நேற்று முன்தினம் ஆறு குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டது. நேற்று எட்டுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்ட சூரமங்கலம் பகுதியில் நடமாடும் கம்ப்யூட்டர் வாகனம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு நேரடியாக வந்து நிலுவை கட்டணத்தை செலுத்தியவர்களின் குடிநீர் இணைப்புக்களை அதிகாரிகள் துண்டிக்காமல் சென்றனர். சூரமங்கலம் மண்டலத்தை தொடர்ந்து அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களிலும் அதிகாரிகள் நீண்ட காலமாக நிலுவை தொகை செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

 ஒரு சில நாட்களில் துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். அதேபோல, கட்சி பிரமுகர்களின் ஆதிக்கத்தால் முறைகேடாக போடப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்களையும் அதிகாரிகள் துண்டிக்க முன் வர வேண்டும். குறிப்பிட்ட சில வணிக நிறுவனங்கள், மண்டபங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் போடப்பட்டுள்ள நேரடியான இணைப்புக்களையும் துண்டித்தால், குடிநீர் பிரச்னையை கட்டுப்படுத்த முடியும்.