Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு: ராசிபுரம் நகராட்சியில் 4 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமலர்             26.11.2010

கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு: ராசிபுரம் நகராட்சியில் 4 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ராசிபுரம்: பூலாம்பட்டி - ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் புங்கனேரி அருகே ராசிபுரத்துக்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் 28ம் தேதி குடிநீர் விநியோகம் ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராசிபுரம் நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூலாம்பட்டி - ராசிபுரம் காவிரி கூட்டு குடிநீர் 34.10 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஹவுசிங் போர்டு ஆகிய இடங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் இடைப்பாடி, ராசிபுரம், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதற்காக நெடுங்குளம், கரட்டுப்புதூர், பூலாம்பட்டி ஆகிய ஊர்களில் பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 600 எம்.எம்., கொண்ட ராட்சத குழாய்கள் தண்ணீர் அழுத்தம் தாங்காமல், அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. தவிர, பூலாம்பட்டி துவங்கி வழியோர கிராமங்கள் முழுவதும் தண்ணீர் சென்று விடுவதால் கடைசியாக உள்ள ராசிபுரத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் ராசிபுரத்தில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக கோடை காலங்களில் குடிநீருக்காக மக்கள் படும் அவஸ்தை வார்த்தைகளால் சொல்ல இயலாத நிலை உள்ளது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு குடிநீர் கிடைக்காத நிலையும் உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழைப்பொழிவால் இடைப்பாடி அருகே ராட்சத குழாய்கள் தாங்கிச் செல்லும் மூன்று மேடை குட்டைகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, பைப்புகள் அனைத்தும் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்கும் வரை ராசிபுரத்துக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராசிபுரம் நகராட்சி கமிஷனர் தனலட்சுமி வெளியிட்ட அறிக்கை: ராசிபுரம் நகராட்சிக்கு இடைப்பாடி நெடுங்குளம் காவேரி ஆற்றிலிருந்து குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தினசரி குடிநீர் பெறப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் கன மழையால் இடைப்பாடி அருகே உள்ள குரும்பப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புங்கனேரியிலிருந்து வந்த மழை வெள்ளம் மூலம் ராசிபுரத்திற்கு பிரதான குடிநீர் குழாய் அடித்து செல்லப்பட்டது. அதை சீரமைக்கும் பணியை குடிநீர் வடிகால் வாரியத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் ராசிபுரம் நகராட்சியில் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.