Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் 2 நாளில் நிரம்பும்

Print PDF

தினகரன்              29.11.2010

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் 2 நாளில் நிரம்பும்

சென்னை, நவ.29: தமிழகத்தில் மொத்தம் 104 சிறிய, பெரிய அணைகள் உள்ளன. இதை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பருவம் தவறி மழை பெய்தது. எல்லா இடங்களிலும் போதிய அளவு மழை பெய்யாததால் பெரும்பாலான விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழகத்தின் பெரிய அணைகளான மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகள், குடிநீருக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக விளங்குகின்றன. மேட்டூர் அணை நீர்மட்டம், கடந்த ஆண்டு இதே தேதியில் 90 அடியாக இருந்தது. இந்த ஆண்டு 115 அடி தண்ணீர் உள்ளது. அதேபோல 105 அடி கொள்ளவு கொண்ட பவானிசாகர் அணை 84 அடியை எட்டியுள்ளது.

தென்மாவட்டங்களில் அணைகள், குளங்கள், ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அனைத்தும் நிரம்பும் நிலையில் உள்ளன. கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 57 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. இந்த ஆண்டு 107 அடியை எட்டியுள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேறிபள்ளம் அணையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அமராவதி, வைகை, முல்லை பெரியாறு அணைகளின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. 3300 அடி கொள்ளளவு உள்ள புழல் ஏரியில் 2513 கனஅடி நீர் உள்ளது. ஒரு நாளைக்கு 681 கனஅடி நீர் வருகிறது. சோழவரம் ஏரி 18 அடி உயரம் உடையது. இங்கு 16 அடிக்கு தற்போது தண்ணீர் உள்ளது. இந்த ஏரி பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் நல்ல மழை பெய்தால் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிடும்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை செயலர் ராமசுந்தரம் கூறுகையில், "தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகமாக பெய்து மற்ற இடங்களில் பெய்யாமல் இருந்திருந்தால் வறட்சி ஏற்பட்டிருக்கும். அப்படி இல்லாமல் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்ற நிலை வராது" என்றார்.