Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் சென்னை ஏரிகளில் கூடுதல் தண்ணீர் அடுத்த ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு வராது

Print PDF

மாலை மலர்             29.11.2010

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் சென்னை ஏரிகளில் கூடுதல் தண்ணீர் அடுத்த ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு வராது

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால்
 
 சென்னை ஏரிகளில்
 
 கூடுதல் தண்ணீர்
 
 அடுத்த ஆண்டு வரை
 
 குடிநீர் தட்டுப்பாடு வராது

சென்னை, நவ. 29- இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை நகரில் சராசரி அளவை விட குறைவாக மழை பெய்துள்ளது.

என்றாலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ளது. கிருஷ்ணா தண்ணீரும் தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது.

எனவே, கடந்த ஆண்டு இதேநாளில் குடிநீர் ஏரிகளில் இருந்த தண்ணீரை விட இந்த வருடம் 2219 மில்லியன் கன அடிதண்ணீர் கூடுதலாக உள்ளது. மழையால் மட்டும் 2600 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு பூண்டி ஏரியில் இதேநாளில் 2158 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்று 2829 மில்லியன் கனஅடி உள்ளது. புழல் ஏரியில் தற்போது 2591 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. கடந்த ஆண்டு இதேநாளில் 1679 மில்லியன் கனஅடி இருந்தது.

சோழவரம் ஏரியில் கடந்த ஆண்டு இருப்பு 607 மில்லியன் கனஅடி. இன்றைய இருப்பு 685 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம் பாக்கத்தில் கடந்த ஆண்டு இதேநாளில் 1570 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்றைய இருப்பு 2128 மில்லியன் கனஅடி. வீராணத்தில் தற்போது 1051 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. கடந்த ஆண்டு இதேநாளில் இருப்பு 785 மில்லியன் கனஅடி.

பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இன்றைய நீர்மட்டம் 34.02 அடி. தண்ணீர் வரத்து 669 கனஅடி. இன்று புழல் ஏரியின் நீர்மட்டம் 17.93 அடி இதன் உயரம் 21.20 அடி சோழவரம் ஏரியின் உயரம் 17.86 அடி. இன்றைய நீர்மட்டம் 15.15 அடி.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இன்றைய நீர்மட்டம் 17.97 அடி. இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 13.90 அடி இதன் மொத்த உயரம் 15.60அடி. வீராணம் ஏரிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்படுகிறது.

பூண்டி. புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் தற்போது 9284 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை சென்னை நகருக்கு குடிநீர் சப்ளை செய்ய போதுமானது.

இதுதவிர கிருஷ்ணா தண்ணீர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி முதல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தின் கீழ் மீஞ்சூரில் இருந்தும் தண்ணீர் வருகிறது. எனவே, இந்த வருடம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சேவராது என்று குடிநீர் வாரியஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சென்னைக்கு 7 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் இதுவரை 2.63 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்கிறது. சென்னைக்கு இதுவரை சராசரியாக தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது 670 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.