Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

Print PDF

தினமலர்             02.12.2010

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

செங்குன்றம் : கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழை மற்றும் பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக புழலேரி, சோழவரம் ஏரிகளின் நீர் இருப்பு ஜிவ்வென அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் புழலேரி முழு அளவில் நிரம்பி விடும். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கை ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் நீர் பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 10ம் தேதி முதல் சென்னை குடி நீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டிய வடகிழக்கு பருவ மழை மற்றும் தமிழகத்தை மிரட்டிய, "ஜல் புயல்' எதிரொலியால் கணிசமான அளவிற்கு மழை கிடைத்தது. தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பருவ மழை நீடித்தது.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி மொத்தம் 330 கோடி கன அடி நீர் இருப்பு அளவு கொண்ட புழலேரியில், 269 கோடியே 50 லட்சம் கன அடி நீர் இருப்பு இருந்தது. (கடந்த ஆண்டு இதே நாளில் இங்கு 165 கோடியே 20 லட்சம் கன அடிக்கு நீர் இருப்பு இருந்தது). ஏரியின் மொத்த நீர் மட்ட உயரம் 21.2 அடி. இதில் தற்போது 18.43 அடி உயரத்திற்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளது. பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து வினாடிக்கு மொத்தம் 885 கன அடி நீர் புழலேரிக்கு வருகிறது. இங்கிருந்து, சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 133 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 41 மி.மீ., அளவிற்கு மழை பதிவாகியது. புழலேரிக்கு அருகில் மொத்தம் 88 கோடியே 10 லட்சம் கன அடி நீர் இருப்பு அளவு கொண்ட சோழவரம் ஏரியில், 69 கோடியே 80 லட்சம் கன அடிக்கு நீர் இருப்பு இருந்தது. (கடந்தாண்டு 60 கோடியே 70 லட்சம் கன அடி நீர் இருந்தது).

இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட உயரம் 17.86 அடி. இதில் 15.36 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் இந்த ஏரிக்கு மழை மற்றும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 450 கன அடி நீர் வரத்து நீடிக்கிறது.
இதில், 300 கன அடி அளவு நீர் பேபி கால்வாய் மூலம் புழலேரிக்கு வெளியேற்றப்படுகிறது. இங்கு அதிகபட்சமாக 126 மி.மீ., அளவிற்கு மழை பதிவாகியிருந்தது. பலத்த மழை தொடர்ந்தால்,மேற்கண்ட ஏரிகள் அடுத்த இரு தினங்களில் முழு அளவிற்கு நிரம்பி விடும். பராமரிப்பு இல்லை: புழலேரியின் ஷட்டர் அமைந்துள்ள மதகு பகுதிக்கு செல்லும் நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி தடுப்புகள் பராமரிப்பின்றி "துரு' பிடித்துள்ளன. சில இடங்களில் அவை விஷமிகளால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏரியை பார்வையிட வருபவர்கள் ஏரிக்குள் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே வரும்முன் காக்க, பொதுப் பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பது நல்லது.