Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பற்றாக்குறை சமாளிக்க 50 நிலத்தடி நீர் தேக்கங்கள்

Print PDF

தினகரன்       03.12.2010

குடிநீர் பற்றாக்குறை சமாளிக்க 50 நிலத்தடி நீர் தேக்கங்கள்

புதுடெல்லி, டிச. 3: ‘குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 50 நிலத்தடி நீர்த்தேக்கங்கள் கட்டப்படும்என்று உயர் நீதிமன்றத்தில் டெல்லி குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி சதாரா பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதை தீர்த்து வைக்க, குடிநீர் வாரியத்துக்கு உத்தரவிடும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வக்கீல் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் இந்த பிரச்னையை தீர்ப்பது பற்றி ஆராய குடிநீர் வாரியம், மாநகராட்சி, நகராட்சி கவுன்சில், டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் அதிகாரிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும்படி மாநில தலைமை செயலாளருக்கு ஏற்கனவே உத்தரவிட்டது.

அத்துடன் சதாரா பகுதியில் உள்ள மஹல்ல கங்காராம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும்படி மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் அதிகாரிகளுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வழக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குடிநீர் வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

டெல்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை 2021ம் ஆண்டுக்குள் தீர்த்து வைக்க முன்னோடி திட்டம் (மாஸ்டர் பிளான்) ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகரின் முக்கியமான பகுதிகளில் 50 நிலத்தடி நீர்த் தேக்கங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிலங்களை டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்கனவே வழங்கி விட்டது.

நிலத்தடி நீர்த்தேக்கங்கள் கட்டும் பணி மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலத்தடி நீர்த் தேக்கத் திட்டம் முடிவடைந்த பிறகு நகரம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்படுள்ளது.