Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புழலேரி இன்று திறப்பு? இருபது அடிக்கு நீர் நிரம்பியது

Print PDF

தினமலர்                06.12.2010

புழலேரி இன்று திறப்பு? இருபது அடிக்கு நீர் நிரம்பியது

செங்குன்றம் : வட கிழக்கு பருவ மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் புழலேரி இன்று அல்லது நாளை திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.கடந்த சில வாரங்களாக கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மற்றும் வட கிழக்கு பருவ மழை காரணமாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு உதவி வரும் புழலேரி மற்றும் சோழவரம் ஏரிகளின் நீர் மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது.நேற்று பகல் 12 மணி நிலவரப்படி மொத்தம் 330 கோடி கன அடி நீர் இருப்பு அளவு கொண்ட புழலேரியில் 296 கோடியே 80 லட்சம் கன அடி நீர் இருப்பு இருந்தது. ஏரியின் மொத்த நீர் மட்ட உயரமான 21.2 அடியில், 19.78 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்தது. பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து வினாடிக்கு மொத்தம் 689 கன அடி நீர் புழலேரிக்கு வந்து கொண்டிருந்தது. இங்கிருந்து, சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 133 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.புழலேரிக்கு அருகே, மொத்தம் 88 கோடியே 10 லட்சம் கன அடி நீர் இருப்பு அளவு கொண்ட சோழவரம் ஏரியில், 77 கோடியே 60 லட்சம் கன அடிக்கு நீர் இருப்பு இருந்தது.

இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட உயரமான 17.86 அடியில் 16.54 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் இந்த ஏரிக்கு மழை மற்றும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 500 கன அடிக்கு நீர் வரத்து நீடிக்கிறது. அதே அளவாக 500 கன அடி நீர் பேபி கால்வாய் மூலம் புழலேரிக்கு வெளியேற்றப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் இடைவிடாத மழை தூறல் இருந்தது. மழை மற்றும் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக மேற்கண்ட ஏரிகள் இன்று(திங்கள்) முழு அளவிற்கு நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வேகமாக நிரம்பி வரும் புழலேரி இன்று அல்லது நாளை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அத்தகவல் பரவியதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து ஏரியை பார்வையிட்டு செல்கின்றனர். எனவே வடகரை, கிராண்ட்லைன், வடபெரும்பாக்கம், மணலி உள்ளிட்ட பல கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நலம். இதற்கு முன் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் புழலேரி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.