Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின

Print PDF

தினகரன்            07.12.2010

தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின

சென்னை, டிச.8: தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளன. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரிகளின் கொள்ளளவு:

பூண்டி ஏரியின் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. 3,002 மில்லியன் கன அடி நீர் நிரம்பி உள்ளது. வரத்து 1,813 கன அடி. முழுமையாக நிரம்பியதால் 4 ஷட்டர்கள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 1,988 கன அடி வெளியேற்றப்படுகிறது. பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீருக்கு 10 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. 2,855 கன அடி நீர் நிரம்பியுள்ளது. வரத்து 1,700 கன அடி. குடிநீருக்கு 93 கன அடி வெளியேற்றப்படுகிறது. நேற்று பகல் 12.30 மணியளவில் 2 ஷட்டர்கள் வழியாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு, அடையாறு ஆற்றின் வழியாக கடலுக்கு செல்கிறது.

புழல் ஏரியின் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. 3,150 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. உயரம் 21.20 அடி. 20.67 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. வரத்து 1200 கன அடி. 700 கன அடி வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது. வரத்து 100 கன அடி. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி நேற்று திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து 3ம் மதகு வழியாக 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வெளியேறும் தண்ணீரின் அளவு, படிப்படியாக உயர்த்தி 500 கன அடியாக திறந்து விடப்படுகிறது. இந்த நீர் மணப்பாக்கம், ரமாபுரம் வழியாக சென்று கூவம் ஆற்றை அடையும். தற்போது மழை அளவு குறைந்துள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதையடுத்து, ஏரியின் 3வது மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை பார்க்க சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் குவிந்தனர்.