Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூண்டி ஏரியில் இருந்து செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு சென்ற நீர் திடீர் நிறுத்தம்

Print PDF

தினமணி           09.12.2010

பூண்டி ஏரியில் இருந்து செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு சென்ற நீர் திடீர் நிறுத்தம்

முழு அளவை எட்டி கடல் போல் காட்​சி​ய​ளிக்​கும் பூண்டி ஏரி.​ ​(வலது படம்)​ செங்​குன்​றம்,​​ செம்​ப​ரம்​பாக்​கம் ஏரி​க​ளுக்கு நீர் வெளி​யேற்​றப்​ப​டும்

திருவள்ளூர், டிச. 8: பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகளுக்கு திறந்து விடப்பட்டிருந்த நீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை குடிநீரின் முக்கிய ஆதாரமாக உள்ள பூண்டி ஏரி, வடகிழக்குப் பருவமழையால் நிரம்பியதை அடுத்து இங்கிருந்து செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஆகிய ஏரிகளுக்கு கடந்த 15 தினங்களாக வினாடிக்கு 800 முதல் 1000 கனஅடி நீர் வீதம் திறந்து விடப்பட்டிருந்தது. இருப்பினும் பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடி நீர்மட்டத்தை எட்டியதால் 5-ம் தேதி பூண்டி ஏரியில் 2 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 500 கனஅடி நீர் வீதம் ஆரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

கிருஷ்ணா கால்வாய் வழியாக கண்டலேறு அணை மற்றும் மழைநீர் சேர்ந்து வினாடிக்கு 2000 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்ததால் பூண்டி ஏரியின் 4 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 3000 கனஅடி வரை நீர் ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகளுக்கும் நீர் சென்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் செங்குன்றம் ஏரி 90 சதவீதமாக 20.57 அடி நீர்மட்டமும், செம்பரம்பாக்கத்தில் 90 சதவீதமாக 21.15 அடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட நீர் புதன்கிழமை காலை முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை பகல் 3 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 35 அடியில் 34.60 அடி உள்ளது.

ஏரிக்கு கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 480 கனஅடி நீரும், மழை காரணமாக வினாடிக்கு 1119 கனஅடி நீரும் சேர்த்து 1599 கனஅடி நீர் வரத்து உள்ளது. பூண்டி ஏரியில் திறக்கப்பட்டுள்ள 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 2237 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மழலைக் கால்வாய் மூலம் சென்னை குடிநீரேற்று நிலையத்துக்கு வினாடிக்கு 10 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.