Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குழாயில் கூடுதல் நேரம் குடிநீர் வழங்க முடிவு அனைத்து தொட்டிகளிலும் ஏற்றி சப்ளை

Print PDF

தினகரன்            13.12.2010

குழாயில் கூடுதல் நேரம் குடிநீர் வழங்க முடிவு அனைத்து தொட்டிகளிலும் ஏற்றி சப்ளை

மதுரை, டிச.13: அணை நிரம்பி வழிந்தாலும், மதுரை நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளையில் மாற்றம் இல்லை. குழாயில் கூடுதல் நேரம் குடிநீர் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அனைத்து மேல் நிலைத் தொட்டிகளிலும் தண்ணீர் ஏற்றி சப்ளை செய்ய தொடங்கியுள்ளனர்.

மதுரை நகருக்கு தேவையான குடிநீர் வைகை அணையில் இருந்து குழாய் மூலம் நேரடியாக வருகிறது. வைகை 2வது குடிநீர் திட்டம் ரூ.68 கோடி மதிப்பீட்டில் 2008 இறுதியில் நிறைவேறியதும், சில மாதங்கள் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அப்போது அணையில் தண்ணீர் இருப்பு குறைந்ததால், 2009 மார்ச் 22ம் தேதி முதல் மீண்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீர் நிரம்பியதும் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவ மழையினால் வைகை அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பெரியாறு அணையிலும் 132 அடிக்கு மேல் நிரம்பியுள்ளது. அணை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். "தினமும் குடிநீர் சப்ளை தேவையில்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாயில் கூடுதல் நேரம் சீராக சப்ளை செய்வதே சிறந்தது. அதை தான் பெண்கள் விரும்புகிறார்கள்" என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். தினமும் சப்ளை செய்தால் குடிநீர் வீணாகும் சூழலே ஏற்படும் என கருதப்படுகிறது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்ளை முறை நீடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுவரை குழாயில் ஒன்றரை மணி நேரம் சப்ளை ஆனது. இனிமேல் கூடுதல் நேரமாக 2 முதல் 3 மணி நேரம் மக்களுக்கு தாராளமாக வழங்க முடிவு செய்து, ஒவ்வொரு பகுதியாக அமல் செய்யப்பட்டு வருகிறது.

வைகை 2வது குடிநீர் திட்டத்தின் மூலம் 5 மேல் தொட்டிகள் கட்டப்பட்டன. குடிநீர் ஏறாமல் இருந்த புதூர் சூரியாநகர் தொட்டியிலும் தற்போது ஏறுகிறது. 8 பழைய மேல் தொட்டிகள் 14 ஆண்டுகளாக குடிநீர் ஏற்ற முடியாமல் பழுதடைந்து கிடந்தன. அந்த தொட்டிகளும் புதிய திட்டத்தின் மூலம் சீர் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரி ஒருவர் கூறுகையில், 1396984945 வைகை 2வது குடி நீர் திட்டம் நிறைவேறியதால் மொத்தமுள்ள 28 மேல் நிலை தொட்டிகளிலும் குடிநீர் ஏற்றி சீராக சப்ளை செய்ய முடிகிறது. முன்பு ஒரு நபருக்கு தினமும் 64 லிட்டர் வீதம் வழங்கப்பட்டது. இப்போது 110 லிட்டராக அதிகரித்து வழங்கப்படுகிறது. இதையே மக்கள் விரும்புகின்றனர். வைகை ஆற்றின் குறுக்கே மேல்கால், கோச்சடை, மணலூர் ஆகிய இடங்களில் புதிதாக தடுப்பணைகள் கட்டி இருப்பதால், அங்குள்ள நீரேற்று நிலையங்களிலும் கூடுதல் நீர் கிடைக்கிறது. கோடையில் குடிநீருக்கு பிரச்சினையே இருக்காது,"என்றார்.