Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடுமலைக்கு 2ம் கட்டகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுமா? : நகராட்சி நிர்வாக ஆணையர் ஆலோசனை

Print PDF

தினகரன்              15.12.2010

உடுமலைக்கு 2ம் கட்டகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுமா? : நகராட்சி நிர்வாக ஆணையர் ஆலோசனை

உடுமலை, டிச. 15: உடுமலைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மற்றும் இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வழியோர கிராமங்களான தளி, ஜல்லிபட்டி, பள்ளபாளையம், போடிபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.

2ம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் கடந்த 1984ம் ஆண்டு அணை பகுதியில் இருந்து உடுமலை நகர் வரை சுமார் 15 கிமீ தூரத்துக்கு சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டது. பல ஆண்டுஆகிவிட்டதால் இந்த குழாய்கள் பலவீனமடைந்து அடிக்கடை உடைப்பு ஏற்படுகிறது. மேலும், வழிநெடுகிலும் புளியமரங்கள் இருப்பதால் அவற்றின் வேர்கள் குழாய்களில் ஊடுருவி உடைப்பை ஏற்படுத்துகின்றன.அடிக்கடி குழாய் உடைவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. ஓரிரு நாள் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு பழுதுபார்க்கின்றனர். இதற்காக ஒரு தடவைக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பல லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்கிறது.குடிநீர் கிடைக்காததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

 இப்பிரச்னைக்கு தீர்வு காண பழைய குழாய்களை முற்றிலும் மாற்றிவிட்டு புதிதாக இரும்பு குழாய்களை பதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அரசுக்கு நகராட்சி தலைவர் வேலுச்சாமியும் கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து, இரும்பு குழாய்கள் பதிக்கவும், கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஊராட்சிகளுக்கு திட்டத்தை விரிவுபடுத்தவும் ரூ.24 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையர் பங்கேற்கும் ஆலோ சனை கூட்டம் நடக்கிறது. இதில் இத்திட்டத்தை அனுமதிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.

இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டால், உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.