Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் தொட்டிகளில் வெப்கேமரா லாரிகளை கண்காணிக்க திட்டம்

Print PDF
தினகரன்       03.01.2011

குடிநீர் தொட்டிகளில் வெப்கேமரா லாரிகளை கண்காணிக்க திட்டம்


கோவை, ஜன.3:

கோவை மாநகராட்சி குடிநீர் தொட்டிகளில் வெப் கேமரா அமைத்து லாரிகளை கண்காணிக்க தொழில்நுட்ப திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், 45 இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையிலிருந்து குடிநீர், பிரதான குழாய் மூலம் சாயிபாபாகாலனி பாரதிபார்க் மற்றும் காந்திபார்க்கில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு வருகிறது. பின்னர், சிறு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கும், வார்டுகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
நகரில், பாரதிபார்க், கணபதி ராமகிருஷ்ணாபுரம், வரதராஜபுரம், புலியகுளம் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து லாரி மூலம் குடிநீர் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை நகரில், 4 மாநகராட்சி லாரி மற்றும் 14 தனியார் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகரில் 761 புதிதாக அங்கீகரிக்கப்பட்ட லே அவுட் இருக்கிறது. இங்கே பகிர்மான குழாய், குடிநீர் இணைப்பு 20 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் லாரி மூலம் அவ்வப்போது குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், மண்டபங்களுக்கு அத்தியாவசிய தேவை அடிப்படையில் குடிநீர் வழங்கப்படுகிறது. 10 ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் 18 லாரிகளில், 40 முதல் 45 டிரிப் வரை குடிநீர் விநியோகம் நடக்கிறது. சுமார் 5 லட்சம் லிட்டர் குடிநீர் லாரி மூலம் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடப்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. குடிநீரை ஓட்டல், லாட்ஜ், தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தொகைக்கு விற்பதாக தெரியவந்தது. டிரிப் முறையிலும் மோசடி நடக்கிறது.

வரதராஜபுரத்தில் குடிநீர் விநியோகிக்காமல் அதற்கான தொகை பெற்றதும் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. பாரதிபார்க், புலியகுளம், கணபதி ராமகிருஷ்ணாபுரம், வரதராஜபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் சுழலும் வெப் கேமரா அமைக்கப்படவுள்ளது. லாரியில் பிடிக்கப்படும் குடிநீர் அளவு, லாரி வந்து செல்லும் நேரம், குடிநீர் அளவு போன்றவை கேமராவில் பதிவாகி விடும். இதேபோல், லாரியில் வெப் கேமரா அமைக்கப்படும். குடியிருப்பு மற்றும் வார்டுகளுக்கு சென்று வரும் நேரம். குடிநீர் அளவு, விநியோகிக்கப்பட்ட விதம் தெளிவாக தெரியும். குடிநீரை வீணாக்கினாலும், முறைகேடாக விற்றாலும் இதில் தெரிந்து விடும்.

குடிநீர் லாரிகளில் கண்டறியும் முறைக்கான (டிராக்கிங் சிஸ்டம்) தொழில்நுட்பம் தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து குடிநீர் லாரிகளும், 4 மேல்நிலை தொட்டிகளும் மாநகராட்சி கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படும்.