Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் பிப்.15 முதல் குடிநீர் சப்ளை : மாநகரில் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி

Print PDF

தினகரன்        03.02.2011

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் பிப்.15 முதல் குடிநீர் சப்ளை : மாநகரில் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி

கோவை, பிப். 3:

பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தின்கீழ் வரும் 15ம்தேதி முதல் குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது. இதன்மூலம், மாநகரில் குடிநீர் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு சார்பில் ரூ.140 கோடி செலவில் பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணிநடந்து வருகிறது. தற்போது, இப்பணி பெருமளவில் நிறைவுபெற்று விட்டது. இப்பணிகளை ஆய்வுசெய்வதற்காக தமிழக ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பூபதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் மனோகரன், கண்காணிப்பு பொறியாளர் ராமசாமி, நிர்வாக பொறியாளர் கோபாலகிருஷ்ணன், குருசாமி ஆகியோர் நேற்று சென்றனர். காலை முதல் மாலை வரை ஆய்வு மேற்கொண்டனர். மாநகரில் இருந்து வெள்ளியங்காடு வரை சுமார் 60 கி.மீ. தூரம் சென்று ஆய்வுமேற்கொண்டனர். வெள்ளியங்காட்டில் தமிழ்நாடு குடிநீர் வாடிகால் வாரியம் சார்பில் தண்ணீர் சுத்தம் செய்யப்படும் பணிகளையும் ஆய்வுசெய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. சிறு, சிறு பணிகள் மட்டும் பாக்கியுள்ளது. இப்பணிகளும் மிக விரைவில் முடிவடைந்து விடும். வரும் 15ம்தேதி முதல் இத்திட்டத்தின்கீழ் பில்லூர் அணையில் இருந்து தினமும் 40 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து மாநகராட்சி பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படும். இதன்மூலம், மாநகரில் குடிநீர் தேவை பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டு விடும். வரும் மார்ச் இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, முழு அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படும். அதன்பிறகு மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இவ்வாறு அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.