Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை கூடுதல் குடிநீர் சேமிப்புக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு: முதல்வர்

Print PDF
தினமணி       20.12.2011

சென்னை கூடுதல் குடிநீர் சேமிப்புக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு: முதல்வர்



சென்னை, டிச.20: சென்னை நகரின் கூடுதல் குடிநீர் சேமிப்புக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

பருவமழை சில நாட்களே பொழிவதால் பருவமழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரினை வீணாக்காமல், நீர்நிலைகளில் தேக்கி வைப்பது  மிகவும் அவசியம் ஆகும்.

சென்னை நகரில் மக்கள் பெருக்கமும், அதற்கேற்றாற்போல் குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. சென்னை நகரின் குடிநீர் தேவை, பருவ மழைக்காலங்களில் பெறப்படும் மழைநீர், வீராணம் ஏரி மற்றும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டு, சென்iயைச் சுற்றியுள்ள, பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் சேமித்து வைக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளின் தற்போதைய கொள்ளளவு பருவமழை காலங்களில் பெறப்படும் மழைநீர், வீராணம் நீர் மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றை முழுமையாக சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது.  இதனால் அதிகமாக பெறப்படும் நீர் கடலுடன் கலந்து விடுகின்ற நிலை ஏற்படுகிறது.   

பெருகி வரும் நகரப் பகுதிகள் மற்றும் மக்களின் குடிநீர் தேவைகளை முழு அளவில் பூர்த்தி செய்ய, சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்கவேண்டியது மிகவும் அவசியம்.

இதனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், போரூர், அயனம்பாக்கம், நேமம் ஆகிய நான்கு ஏரிகளை ஆழப்படுத்தி, கூடுதலாக தண்ணீர் தேக்கி வைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், செம்பரம்பாக்கம் ஏரியில் ஏற்கெனவே உள்ள நீரின் கொள்ளவை உயர்த்தி, கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்க சீராக்க பணிகளை மேற்கொள்வதற்காகவும், 130 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், 50 லட்சம் ரூபாய் செலவில் சோழவரம் ஏரியின் கொள்ளளவை 1,080 மில்லியன் கன அடியாக உயர்த்தவும், 20 கோடி ரூபாய் செலவில் போரூர் ஏரியின் தரைப் பகுதியை 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை ஆழப்படுத்தி, இதன் கொள்ளளவை 70 மில்லியன் கன அடியாக உயர்த்தவும், 30 கோடி ரூபாய் செலவில், அயனம்பாக்கம் ஏரியின் கரையினை பலப்படுத்தி, கரைக்கு அருகிலுள்ள நிலப்பரப்பினை சுமார் 2 மீட்டர் வரை ஆழப்படுத்தி, ஏரியின் கொள்ளளவை 314 மில்லியன் கனஅடியாக  உயர்த்தவும், 79.50 கோடி ரூபாய் செலவில், நேமம் ஏரியின் கொள்ளளவை 577 மில்லியன் கன அடியாக உயர்த்தவும் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியினை சீராக்கம் செய்திடவும் என மொத்தம் 130 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் 568 மில்லியன் கனஅடி தண்ணீர் கூடுதலாக சேமித்து வைக்கப்படும். இந்த நடவடிக்கையின் பயனாக, மழைநீர் வீணாக கடலில் கலப்பது தடுக்கப்படுவதுடன், பெருகி வரும் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யவும் இயலும்.