Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கூடுதல் நீரை சேமிக்க திட்டம்

Print PDF

தினமலர்       27.12.2011

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கூடுதல் நீரை சேமிக்க திட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, இந்தாண்டு பருவ மழைக்கு மட்டும், 1.5 டி.எம்.சி., உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளில், 11 டி.எம்.சி., நீர் வீணாக வெளியேறியுள்ளது. வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து வைக்க, புதிய திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது.

சென்னை மாநகரத்திற்கு புதிய வீராணம், புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் நீர்தேக்கங்களில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. இதை தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநிலம் வழங்கும், கிருஷ்ணா நதிநீரை புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் சேமித்து வைத்து, நகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. கிருஷ்ணா நீர் பெறும், கால அட்டவணை தமிழகத்தில், பருவமழை துவங்கும் நேரம் என்பதால், பருவமழைக்கு முன்பே சென்னை குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் ஏரிகள், 75 சதவீதம் வரை நிரம்பிவிடுகின்றன. பருவமழைக் காலத்தில் கிடைக்கும் முழு அளவு நீரையும் சேமித்து வைக்க முடியாமல், உபரிநீர் வீணாக கடலுக்குத் திறந்துவிடப்படுகிறது.

வீணாகும் நீர்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, இந்தாண்டு நவம்பரில் மட்டும், 1.3 டி.எம்.சி., உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் மொத்தம், 1.5 டி.எம்.சி., அளவிற்கு நீர் திறந்து வெளியேற்றப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு முதல், இந்தாண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, 11 டி.எம்.சி., நீர், சேமிக்க வழியில்லாமல் வெளியேற்றப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, கடந்த 2005ல் ஒன்பது முறை செம்பரம்பாக்கம் ஏரி மறுகால் திறக்கப்பட்டு, 6.8 டி.எம்.சி., உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதே அளவு, புறநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மணிமங்கலம், ஆதனூர், படப்பை உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரும், அடையாறு ஆறு வழியாக கடலில் கலக்கிறது. இந்த வகையில் மட்டும், கடந்த 2005ம் ஆண்டு முதல், இந்தாண்டு வரை 10 டி.எம்.சி., அளவு உபரிநீர் வெளியேறியுள்ளது.

சேமிப்பு வழிகள்

வீணாகும் நீரை முறைப்படி சேமித்தால், சென்னை மற்றும் புறநகருக்கு தினமும் தாராளமாக குடிநீர் வழங்க முடியும். அதிகாரிகளின் திட்டமிடல் இன்மையால் தண்ணீர் வீணாவதாக நீர்வள நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரி பல ஆண்டுளாகி விட்டது. தற்போது, 3,645 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டதாக, ஏரி இல்லை என்பதை நீர்வள நிபுணர்கள் கணித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில், தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏரியை தூர் வாரி ஆழப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதற்கான செலவுகளை மதிப்பிடும் படி பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூர்வார வேண்டும். ஏரியின் பரப்பளவுக்கு ஏற்ப ஆழம் இல்லை. இதை இன்னும் ஆழப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆழப்படுத்தினால், செம்பரம்பாக்கம் ஏரி முழு அளவில் நீர் சேமிக்க முடியும்.

செயற்கை ஏரிகள் சாத்தியமா?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் காவனூர், சிறுகளத்தூர், குன்றத்தூர், வழுதலம்பேடு, திருமுடிவாக்கம் ஆகிய கிராமங்கள் வழியாக பாய்ந்து, திருநீர்மலை அருகே அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதற்காக மொத்தம், 6.25 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் உள்ளது. அடையாறு ஆறு, 42 கி.மீ., தூரம் கொண்டது. இதில், மணப்பாக்கத்தை கடந்த பின்தான் முழு அளவில் மாசடைகிறது. அதற்கு முன், சில உள்ளாட்சிகளில் இருந்து வரும் கழிவுநீரும், நாகல்கேணி தோல் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் ஆற்றில் கலக்கிறது. இதையும் தடுத்து நிறுத்தினால், மணப்பாக்கம் வரை ஆறு மாசு இன்றி இருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு பகுதியில் இருந்து, மணப்பாக்கம் வரை உள்ள பகுதியில், ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இங்கு தேவைக்கு ஏற்ப உபரி நீரை சேமித்து வைக்க, செயற்கை ஏரிகள் அமைக்க ஆய்வு நடத்த வேண்டும்.

ஆந்திராவை பாருங்கள்

உபரிநீரை சேமிக்க ஆந்திர மாநிலத்தில், பல டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, ஏராளமான செயற்கை ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அது போன்று நிலப்பரப்பளவுக்கு ஏற்ப, 0.3 முதல் 0.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட சிறிய ஏரிகளை, அடையாறு கரையோரம் அமைப்பது பற்றி திட்டமிடலாம். இதனால், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்குவதை தவிர்க்கலாம். தண்ணீரையும் சேமிக்கலாம்.

தடுப்பணைகள்

அடையாறு ஆற்றில், தற்போது ஒரு தடுப்பணை மட்டுமே உள்ளது. இங்கு மழைக்காலத்தில் தேங்கும் நீரால், அந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் வளம் பெருகியுள்ளது என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை, விமான நிலைய இரண்டாவது இணை ஓடுதளம் அமைப்பதற்காக, மணப்பாக்கம் தடுப்பணை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, கவுல்பஜார் அருகே ஒரு தடுப்பணை கட்டி தருவதாக விமான நிலைய ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. இன்னும் அதற்கான நடவடிக்கை துவங்கவில்லை. அடையாறு ஆற்றில், திருநீர்மலை முதல் கவுல்பஜார் வரை இரண்டு தடுப்பணை கட்டலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

நீர்வள நிபுணர் ஒருவர் கூறுகையில், "புறநகரில் விவசாயம் குறைந்து விட்டதால் பாசனத்திற்கு நீர் தேவையில்லை. குடிநீர் தேவை அதிகரிப்பதால் இன்னும், 10 ஆண்டுகளில் அதன்தேவை இருமடங்காக உயரும். அப்போது புதிய நீர் ஆதாரங்களை தேட முடியாது. தற்போது இருக்கும் சில நூறு ஏக்கர் பரப்பளவு இடங்களும், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கவும், வீணாகும் நீரை சேமிக்கவும் திட்டமிடுதல் அவசியம்' என்றார்.

கூடுதல் நீர் சேமிப்பு

செம்பரம்பாக்கம் ஏரி, 2,551 எக்டேர் பரப்பளவு கொண்டது. தற்போது முழுக் கொள்ளளவு நீர் உள்ளது. ஏரியின் நீர்மட்டம், 24 அடி. ஏரியின் நீர்மட்டத்தை கணக்கிடும் கோபுரம் பகுதியில் இருந்து, உபரிநீர் வெளியேறும் மதகுகள் அமைந்துள்ள பகுதிவரை, 200 மீட்டர் சுற்றளவிற்கு மட்டுமே தான் ஏரி ஆழம், 24 அடியாக இருக்கும். மற்ற இடங்களில், 10 முதல் 18 அடி வரைதான், சராசரியாக நீர் தேங்கும் வகையில் உள்ளது. ஏரிக்கு நீர் வரும் பகுதியில் மட்டத்தில் இருந்து, 2 அடி ஆழம் மட்டுமே உள்ளது. இந்த இடத்தில் இருந்து ஏரி உள்நோக்கி வரும் போது, ஐந்து அடி துவங்கி ஆழம் மெல்ல அதிகரிக்கிறது. இப்படி ஆளம் குறைவாக உள்ள பகுதியில் மண் படிந்துள்ளது. இப்படி படிந்துள்ள மண்ணை தூர்வாரி முறைப்படுத்தினால், தண்ணீர் தேங்கும் அளவு மிகவும் அதிகரிக்கும். இதற்காக தற்போது, செம்பரம்பாக்கம் உட்பட சென்னையை சுற்றியுள்ள, ஐந்து ஏரிகளை ஆழப்படுத்த, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, செம்பரம்பாக்கம் ஏரி ஆழப்படுத்துவது மற்றும் சில சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திட்ட வரைவுகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரும் பகுதியில் இருந்து, குறைந்தபட்சம், 10 அடிக்கு குறையாமல் ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்வரும் பகுதியில் ஆழம் மேலும் அதிகமாக்கப்பட உள்ளது. ஆனால், ஏரியின் தற்போதைய அதிகபட்ச உயரமான நீர்மட்டம், 24 அடி என்பதை உயர்த்த திட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. சராசரியான அளவிற்கு ஏரியை ஆழப்படுத்தும் போது, செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக அரை டி.எம்.சி., வரை நீரை சேமிக்கலாம், என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதை நான்கு பிரிவுகளாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வளவு தூரத்திற்கு, எத்தனை அடி வரை ஆழம் எடுப்பது என்று இறுதி முடிவு எடுக்கும் போதுதான், கூடுதலாக சேகரிக்கப்பட உள்ள, நீரின் அளவை நிச்சயமாகக் கூறமுடியும் என்றார். அந்த அதிகாரி.

செம்பரம்பாக்கத்தை பாதுகாக்க ரூ.26 கோடி

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்புக்காக, 26 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு திட்டம் தீட்டி, அதை அரசின் பார்வைக்கு அதிகாரிகள் ஏற்கனவே அனுப்பியுள்ளனர். ஆக்கிரமிப்பை தடுத்து கரையோரம் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில், ஏரியை சுற்றி கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்கவும், ஏரிக்கரையில் சிதிலமடைந்துள்ள, சாலையைச் சீரமைக்கவும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதில், கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க மட்டும், 15 கோடி ரூபாய் தேவை, என கணக்கிடப்பட்டுள்ளது. ஏரியை ஆழப்படுத்தி, பாதுகாப்பு பலப்படுத்தினால் தான், ஏரி நீரை பாதுகாக்க முடியும்.

கடலுக்கு போன குடிநீர் 2005ம் ஆண்டு முதல் வெளியேறிய உபரிநீர் ஆண்டு டி.எம்.சி.,
2005 6.8 2007 0.7
2008 1.7 2010 0.5 2011 1.5

- கே.எஸ்.வடிவேலு -