Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடிநீர்த் திட்ட சீரமைப்புப் பணிகள்

Print PDF
தினமணி         13.07.2012

மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடிநீர்த் திட்ட சீரமைப்புப் பணிகள்


மேட்டுப்பாளையம், ஜூலை 12: மேட்டுப்பாளையம் நகராட்சியில் செயல்பட்டு வரும் மூன்று குடிநீர்த் திட்டங்களில் ரூ. 30 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 33 வார்டுகளில் வசித்து வரும் மக்களுக்கென பழைய முதல் குடிநீர்த் திட்டம், ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டம், மேட்டுப்பாளையம் 2-ம் குடிநீர்த் திட்டம் என, மூன்று குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 பழைய முதல் குடிநீர்த் திட்டம் மூலம் சத்தியமூர்த்தி நகர், மகாதேவபுரம், காட்டூர், ரயில் நிலைய சாலை, சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டம் மூலம் அண்ணாஜி ராவ் சாலை, நியூ எக்ஸ்டன்ஷன் வீதி, சந்தைக்கடை, பங்களாமேடு ஆகிய பகுதிகளுக்கும், மேட்டுப்பாளையம் 2-ம் குடிநீர்த் திட்டம் மூலம் கே.கே.நகர், நடூர், கோ-ஆபரேடிவ் காலனி, கோவிந்தசாமி நகர், சாந்தி நகர், காட்டூர், கெண்டையூர், நாடார் காலனி, சங்கர் நகர் ஆகிய பகுதிகளுக்கும் சுமார் 12.75 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

 இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில், நகரின் மூன்று குடிநீர்த் திட்டங்களிலும் குடிநீர் வடிகால் படுகைகள் மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 அதன் முதல்கட்டமாக மேட்டுப்பாளையம் 2-ம் குடிநீர்த் திட்டத்திலுள்ள குடிநீர் வடிகால் படுகையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 இக் குடிநீர்த் திட்டத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சுத்திகரிப்புக் குழாய் மாற்றம், நீரை வடித்தெடுக்கும் மணல், கூழாங்கற்களைப் புதிதாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன.

 இத் திட்டப் பணிகளை, நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார், துணைத்தலைவர் ரமாசெல்வி, கவுன்சிலர் ராதா, நகராட்சி மின் கண்காணிப்பாளர் அன்வர், உதவி பொறியாளர் நாகராஜ், உதவியாளர் மகேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

 சீரமைப்புப் பணிகள் குறித்து நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் கூறியது:

 மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மூன்று குடிநீர்த் திட்டங்களில் முதல் கட்டமாக 2-ம் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வடிகால் படுகையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து பழைய முதல் குடிநீர்த் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டங்களில் ரூ. 20 லட்சம் மதிப்பில் வடிகால் படுகைகள் மாற்றியமைக்கும் பணி நடைபெறும்.

 பழைய குடிநீர்த் திட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின்னரும் குடிநீர் வடிகால் படுகைகள் மாற்றும் பணி நடைபெறுகிறது. இப் பணிகள் நிறைவு பெற்ற பின்னர் சுத்திகரிக்கப்பட்ட, தூய குடிநீர் நகர மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.