Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் குடிநீர் தஞ்சை நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர்                         25.07.2012

ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் குடிநீர் தஞ்சை நகராட்சி தலைவர் தகவல்

தஞ்சாவூர்: ""கொள்ளிடம் ஆற்றில், புதிதாக அமைக்கப்பட்ட அதிக விட்டம் கொண்ட ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் தஞ்சை நகர மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பணி இன்னும் ஒருவாரத்தில் துவங்கும். இனிமேல் தஞ்சை நகர மக்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது'' என, தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி தெரிவித்தார்.

தஞ்சை நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் பெறும் வகையில் கொள்ளிடத்தின் மையப்பகுதியில் திருமானூர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, 18 கி.மீ., தூரம் குழாய்கள் அமைத்து, வெண்ணாற்றிலுள்ள நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.கொள்ளிடம் ஆற்றிலுள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து ஆற்றுக்கரை ஆற்றின் தரைமட்ட தளத்தில் ராட்சத இரும்புக்குழாய்கள் பதித்து தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. இந்த குழாய்களில் அடிக்கடி கசிவும், பழுதும் ஏற்பட்டு வந்தது. இதனால், குறிப்பிட்ட அளவுக்கு நீரை எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆற்றில் தண்ணீர் வராத காலத்தில், கசிவு ஏற்பட்டால் உடனடியாக குழாய்களில் பழுதை சீரமைக்க முடியும். ஆனால், தண்ணீர் ஓடும் சமயத்தில் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ பழுது பார்ப்பது சிரமம்.

அதனால், நீரேற்று நிலையத்திலிருந்து, கொள்ளிடைக்கரை வரை ஆற்றின் தரைத்தளத்திலிருந்து ஆறு மீட்டர் உயரத்தில், நடைபாதையை 1,010 மீட்டர் நீளத்துக்கு அமைத்து, அதில், கான்கிரீட் மேடை போட்டு, அதன் மீது ராட்சத குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.நகராட்சித்தலைவர் சாவித்திரி கூறுகையில், ""நடைபாதை அமைப்பின் மீது நீரேற்று நிலையத்திலிருந்து ஆற்றின் மீது குழாய்கள் பதித்து, குடிநீரை எடுத்து வருவதன் மூலம் குடிநீர் வீணாவது தடுக்கப்படும். பழுதுகளை உடனுக்குடன் சரிபார்க்க முடியும். கொள்ளிடத்திலிருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுத்து வர முடியும். இன்னும் ஒருவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அதிக விட்டம் கொண்ட ராட்சத குழாய்கள் மூலம் தஞ்சை மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பணி துவங்கும். இனிமேல் தஞ்சை நகர மக்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது,'' என்றார்.ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.