Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி                               26.07.2012

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

பெரம்பலூர், ஜூலை 25: பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 57 கோடியே 83 லட்சம் மதிப்பில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் 306 கிராமங்கள் மற்றும் அரும்பவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சி பகுதிகளும் பயனடைய உள்ளன.

செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் நிலையத்திலிருந்து, இத்திட்டத்துக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இதற்கான பணிகள் பாடாலூர் பகுதி வரை முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதிகளுக்கு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.இதற்கான நீர் உந்தும் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், பெரியம்மாபாளையம், அரும்பாவூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்தும் நிலையங்களையும், பாடாலூர், நாரணமங்கலம், தெரணி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், திட்டத்தை விரைந்து செயல்படுத்தி 306 கிராமங்களுக்கும் விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக ரூ. 156 லட்சத்தில் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டும் இடத்தையும் அவர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, கூட்டுக் குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் சந்திரசேகரன், உதவி நிர்வாக பொறியாளர்கள் விஜயராகவன், கனகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.