Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"நகராட்சி பகுதியில் விரைவில் குடிநீர் விநியோகம்'

Print PDF
தினமணி                   03.08.2012

 "நகராட்சி பகுதியில் விரைவில் குடிநீர் விநியோகம்'


தஞ்சாவூர், ஆக. 2: குடிநீர் குழாயை இணைக்கும் பணி நிறைவடைந்து வருவதால், விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார் தஞ்சாவூர் நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தஞ்சாவூர் நகராட்சி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் எடுக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேம்பாலம் அமைக்கப்பட்டு அதில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிவுற்றுள்ளது.

இதில், தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் இணைப்பைத் துண்டித்து, புதிய குழாயுடன் இணைப்பு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, தஞ்சாவூர் நகராட்சியில் கடந்த 2 நாள்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

நடைபெற்று வரும் இந்தப் பணிகளை தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் கூறியது:

நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கும் பொருட்டு திருமானூர் கொள்ளிடம் நீரேற்று நிலையத்திலிருந்து ஆற்றின் தரை தளத்துக்கு ரூ. 11 கோடியில் 6 மீட்டர் உயரத்தில் 1010 மீட்டர் நீளம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்று புதன்கிழமை சோதனை அடிப்படையில் நீரேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் விரைவில் முடிவடைந்தவுடன் ஓரிரு நாளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு விடும். இவ்வாறு பாலத்தில் குழாய் அமைக்கும் பணியால் ஆற்றில் தண்ணீர் வீணாவது முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன், பொறியாளர் சீனிவாசன், திருவையாறு ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் என். இளங்கோவன், மாவட்ட அதிமுக முன்னாள் துணைச் செயலர் ஜெ.வி. கோபால், நகர்மன்ற உறுப்பினர்கள் சுவாமிநாதன், சரவணன், பூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.