Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது

Print PDF

தினகரன்    06.08.2012

மழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது

கோவை,:    கோவை  மாவட்டத்தில்  நிலத்தடி   நீர்   மட்டம்   ஒரே   மாதத்தில்   2   மீட்டர் சரிந்தது.பொதுப்பணித்துறையின் நிலநீர் மட்ட   பிரிவு  சார்பில் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்டம் குறித்து  ஆய்வு நடக்கிறது.

மாவட்ட அளவில் 12 ஒன்றியங்களில் 237 கிணறு, ஆழ்குழாய்களில் நீர் மட்ட நிலவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த ஆய்வில் நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மாவட்ட அளவில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த  பிப்ரவரி  மாதம்  கோவை  மாவட்டத்தில்  நிலத்தடி நீர்  மட்டம்  16  மீட்டர்  அளவிற்கு காணப்பட்டது.  மார்ச்  மாதம்  17  முதல்  18  மீட்டர்  வரையிலும்,  ஏப்ரல்  மாதம்  20  மீட்டர் அளவிற்கும்  குறைந்தது.  ஜூன்,  ஜூலை  மாதங்களில்  நிலத்தடி  நீர்  மட்டம்  உயரும்  என எதிர்பார்க்கப்பட்டது.  தென்  மேற்கு  பருவ  மழை பெய்யாததால் கடந்த ஜூனில் நிலத்தடி நீர் மட்டம்    இறுதி  அளவாக  சராசரியாக   20.5 மீட்டர்,  ஜூலையில்  சராசரியாக  22.5  மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் சென்று விட்டது.

கடந்த  மாதம்  பல்லடம்,  சுல்தான்  பேட்டை,  சூலூர்,  நீலம்பூர்,  அரசூர்,  கணியூர்,   அன்னூர் பகுதியில்  40க்கும்  மேற்பட்ட  கிணறுகளில்  30 மீட்டருக்கும்  கீழ்  நீர்  மட்டம்  தென்பட்டது.

மதுக்கரை, தொண்டாமுத்தூர், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 25 மீட்டர் அளவிற்கு  நீர்  மட்டம்   தென்பட்டது.  35  கிணறு, ஆழ்  குழாய்   கிணறுகளில்   நீர் காணப்படவில்லை.

குளம் சார்ந்த பகுதியில் 15 மீட்டர் ஆழத்தில்நீர் மட்டம் இருப்பது வழக்கம். குறிப்பாக உக்குளம், புதுக்குளம், கொலராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி, வெள்ளலூர், சிங்காநல்லூர் உட்பட 28 குளங்கள் நீறின்றி வறண்டு காணப்படுகிறது.

குளங்களை ஒட்டிய இடங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டமும் பாதாளத்திற்கு சென்று விட்டது.இந்த மாதம் மழை பெய்யாவிட்டால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறைந்து விடும். மாவட்ட அளவில்  100 முதல் 200 அடி ஆழத்தில் ஆழ் குழாய் அமைத்து தண்ணீர் பெறப்படுகிறது.நீர் மட்டம் குறைந்து வருவதால் நிலத்தடி நீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளில் வறட்சி நீடிக்கிறது. குடிநீர் விநியோகமும் குறைந்து வருகிறது.