Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"பழனியில் 4 நாள்களில் குடிநீர் விநியோகம் சீராகும்'

Print PDF

தினமணி              06.08.2012

 "பழனியில் 4 நாள்களில் குடிநீர் விநியோகம் சீராகும்'

பழனி, ஆக. 5: பழனி வார்டுகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோக பிரச்னை நான்கு நாள்களில் சீரடையும் என நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, நகர்மன்றத் தலைவர் வேலுமணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனி நகருக்கு கோடைகால நீர்த்தேக்கம் மூலம் 5.64 மில்லியன் லிட்டர், பாலாறு நீர்த்தேக்கம் மூலம் 2.43 மில்லியன் லிட்டர் என 8.07 மில்லியன் லிட்டர் குடிநீர் சாதாரண நாள்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து வரும் முக்கியக் குழாய்களில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுள்ள உடைப்புகளால் 4,5,6,7,25 மற்றும் 26}வது வார்டுகளில் குடிநீர் சீராக விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்புகள் துரித வேகத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

நான்கு நாள்களில் இப்பணிகள் நிறைவுபெறும் நிலையில் குடிநீர் விநியோகம் சீராகும். அதுவரை வார்டுகளுக்கு நகராட்சி லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ரூ. 21.60 கோடி மதிப்பில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் குடிநீர் அபிவிருத்திப் பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு முக்கிய குழாய்கள் மாற்றப்பட்டு வருகிறது. இப்பணிக்கு முக்கியத்துவம் தருமாறு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 2012}க்குள் இப்பணிகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.