Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

60 வார்டிலும் ரூ.1.80 கோடியில் ஆழ்குழாய்!

Print PDF

தினமலர்          07.08.2012

60 வார்டிலும் ரூ.1.80 கோடியில் ஆழ்குழாய்!

ஈரோடு: மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, 1.80 கோடி ரூபாய் செலவில், 60 ஆழ்குழாய்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதுவரை, 28 வார்டுகளில் போர்வெல் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு காவிரி நீர் வழங்கப்படுகிறது. ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, மாநகராட்சியின், 60 வார்டுகளிலும் உப்பு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வார்டில் எப்போதும் தண்ணீர் சப்ளை இருந்து கொண்டே இருக்கும் வகையில், உப்பு தண்ணீர் தேவையான பகுதிகளில் ஒரு ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி, மின் மோட்டார் இணைப்பு கொடுக்கப்படுகிறது. வார்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவில், மொத்தம், ஒரு கோடியே, 80 லட்சம் ரூபாய் பொது நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் மண்டலத்தில் காஞ்சிநகர், குறிஞ்சிநகர், காவேரிநகர், செங்குந்தர் புரம், அன்னை சத்யா நகர், பெருமாள் கோவில் ராஜிவ்நகர், ஆர்.என்.,புதூர் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் மண்டலத்தில், 16 லட்சம் ரூபாய் செலவில் ஆறு இடங்களிலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சம் ரூபாய் செலவில் எட்டு இடங்களிலும் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கங்காபுரம், எல்லப்பாளையம், மாமரத்துப்பாளையம், வீரப்பன்சத்திரம் புறநகர், ஆண்டிக்காடு, பாண்டியன்நகர், கிழக்குகாடு, நந்திநகர், திரு.வி.க.,வீதி உட்பட 14 ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது மண்டலத்தில் விவேகானந்தர் வீதி, வ.உ.சி.,வீதி, அணைக்கட்டு ரோடு, பாண்டியன் வீதி, ராஜாக்காடு, பெரியார்நகர், என்.ஜி.ஜி.ஓ., காலனி ஆகிய பகுதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. நான்காவது மண்டலத்தில், சேனாபதிபாளையம், தங்கபெருமாள்வீதி, காமாட்சி காடு, ஆறுமுக வீதி, வெண்டிபாளையம் லட்சுமி நகர், குமரன் நகர் போன்ற பகுதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை, நான்கு மண்டலத்திலும், 28 இடங்களில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தரைமட்டத்துக்கு மேல் சின்டெக்ஸ் தொட்டி வைத்து, மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு, பொது குழாய் மூலம் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் வகையில் வசதி செய்யப்பட உள்ளது.

துணை மேயர் பழனிசாமி, ""ஒரு மண்டலத்துக்கு, ஏழு போர்வெல் வீதம், நான்கு மண்டலத்திலும், 28 ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்து சீரமைக்கப்படுகிறது,'' என்றார்.